பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

31


கொள்ளப் பெறாமையால் அரங்கேறாதிருந்ததினாலும், அது கழக நூலும் கழக மருவிய நூலுமல்லாது தனியாகவேயிருந்துவந்தது. பிற்காலத்திற் கடைக்கழகங் சலைக்கப்பட்டபின், சமணத் தமிழ்க் கழகத்தைச் சேர்ந்த அறநூலாசிரியர் சிலர் தம் நூல்கட்குக் கடைக்கழக நூல் நிலைமை யூட்டல் வேண்டி, கழகக் காலத்தனவும் பிற்காலத்தனவுமான பதினெண் நூல்களை ஒரு தொகுதியாக்கி, அவற்றைப் பதினெண் கீழ்க்கணக்கென்றும் பத்துப் பாட்டையும் எட்டுத்தொகையையும் பதினெண் மேற்கணக்கென்றும் வழங்கினதாகத் தெரிகின்றது.

திருக்குறள் கழகநூலன்மையாலும், அதற்கு நால் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னாநாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கே கழகக்காலத்தன வாதலாலும், ஏனையவெல்லாம் வச்சிர நந்தி 5ஆம் நூற்றாண்டில் மதுரையில் சமணத் தமிழ்க்கழகம் நிறுவிய பின்னரே எழுந்தவையாதலாலும், அவற்றுள் ஆசாரக்கோவை திருக்குறட்கு நேர்மாறாக வடசொல்லும் ஆரியக்கொள்கையும் மிகுந்திருப்பதுடன், இழிதகு நிலையில் தமிழரைப் பிராமணர்க்கு அடிமைப்படுத்தியிருப்பதாலும், பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தொகுதிமுறை மிகத் தவறானதென்றும், திருக்குறளை அதிற் சேர்த்தது அதினும் மிகத் தவறானதென்றும் அறிந்து கொள்க.

திருக்குறளைக் கடைக்கழகக் காலத்து அம்மை வனப்பு நூலென்று கொள்வதே தக்கதாம்.

10. பாயிரவிளக்கம்

“ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே”,

"மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது."

"பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூலினிது விளங்கும்."