பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

I
அறத்துப் பால்

1

பாயிரவியல்

அதிகாரம் 1 - முதற்பகவன் வழுத்து

அதாவது, ஆசிரியன் தான் இயற்றும் நூல் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டும். தன் நூலிற்கு வேண்டிய தெள்ளிய அறிவை அறிவிற்குப் பிறப்பிடமாகிய இறைவனிடத்தினின்று பெறற்பொருட்டும், இறைவனருள் உலக நடப்பிற்கு இன்றியமையாத முதற்கரணியமாதலின் அதைத் தேடுதற்கு எல்லா மாந்தரும் எவ்வினையையும் இறைவனைத் தொழுதே தொடங்கல் வேண்டும் என்னும் நெறிமுறையை உலகிற்கு உணர்த்தற் பொருட்டும். இறைவனை வழுத்துதல். வழுத்துதல் போற்றுதல். துதித்தல் என்பது வடசொல்.

சிறுதெய்வ வணக்கம், பெருந்தேவ வணக்கம், கடவுள் வணக்கம் என முறையே ஒன்றினொன் றுயர்ந்த மூவகை வணக்கங்களுள், இது கடவுள் வணக்கம். கடவுள் என்னும் சொல் இம் முதலதிகாரப் பத்துக் குறள்களுள் ஒன்றிலேனும் வாராமையானும், முதற்குறளில் ஆதிபகவன் என்னும் பெயரே குறிக்கப் பெற்றிருத்தலானும், கடவுள் வாழ்த்து இங்கு முதற்பகவன் வழுத்து எனப் பெற்றது.

வாழ்த்து என்னும் சொல் மக்களை வாழ்வித்தலும் இறைவனைப் போற்றுதலும் ஆகிய இருபொருள் தந்து மயங்கற் கிடனாக நிற்றலால், வழுத்து என்னும் சொல்லை அதனின்று திரித்தனர் முன்னை யறிஞர்.

அதிகரித்தது அதிகாரம். இது இலக்கண நூல்களிற் பெரும் பகுதியைக் குறிக்குமேனும், இங்கு உட்சிறுபகுதியைக் குறிக்குமாறு ஆளப்பட்டது.