பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - முதற்பகவன் வழுத்து

39


கொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு. ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களை யுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன், கடவுள், தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச் சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல் பிற்கேற்ப ஆதிப் பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ் வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு.

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" (திருவள்ளுவமாலை)

என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே எனப் பிரித்தாற் குற்ற மென்ன?" என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று: அடிகள் விடை மிகைபடக் கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று.

அகரம் எல்லா எழுத்துகட்கும் முதலாகவும், ஏனை யுயிரெழுத்துகளோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துகளையும் இயக்கியும் நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை. இம் முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்பு வினைமுற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.