பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்பு

45



உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகு பெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகை யுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும் நீரும், தொடர்ந்த பசி தகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும்.

"இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம்.70)

நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. ஆயினும், உயிர்கட்கெல்லாம் பிணிமூப்புச் சாக்காடிருத் தலால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந் தினால் நோய் நீங்கினவனைச் சாவினின்று தப்பினான் என்று கூறும் வழக் கைக் காண்க.


அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும்.


அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் -அவிழ்து அவிழ்தம் - அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம்" (மணிமே. 28: 116). அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர்.


நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு,நீர்.


மருமம்-(மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு.


பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற் களின் ஒருபுடை யொப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால்.


அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ் வடிவை அ + ம்ருத என்று விரித்து. சாவை (மரணத்தை)த் தவிர்ப்பது என்று பொருளுறுத்தி, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங் கட்டிவிட்டனர் வடமொழியாளர்.


இங்ஙனங் கட்டினும், மீண்டும் அது தென்சொல் திரிபேயாதல் காண்க.


அல் (எதிர்மறை முன்னொட்டு) - அ. ஒ.நோ: நல் - ந. மடி - மரி - ம்ரு(வ.) - ம்ருதி, ம்ருத்யு (சாவு).


தேவர் அமுதுமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவரமுதம் என்னும் இல்பொருளை உவமையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென உணர்க.