பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திருக்குறள்

தமிழ் மரபுரை


உடம்பில்லாவிடினும், அவன் என்றேனும் ஒரு வடிவுகொள்ளின் அதன் அடியும் முடியும் ஒரு நிகரவாகவே தூய்மையாயிருப்பினும், அவனை வணங்கும் மக்களின் பணிவியலை மிகுத்துக் காட்டற்கே, திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் என்று கூறுவது மரபாகும்.

இறைவன் வழிபாட்டிற்குப் பயன்படுவதே மாந்தன் உடம்பின் தலை யாய பயன் என்பது இக் குறட் கருத்து.

10. பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்.

(இ-ரை.) இறைவன் அடி (சேர்ந்தார்)-இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர்: சேராதார் நீந்தார் - அப் புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வரு வதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின் பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந் துய்க்கும் பிறவா வாழ்வைப் பெறும் வழியை இக் குறள் கூறுகின்றது.

சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங் குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.

அதி. 2- வான்சிறப்பு

அதாவது, இறைவனருட்கு அடுத்தபடியாக, அவன் ஏற்பாட்டின்படி, உலக நடப்பிற்கும் அறம்பொரு ளின்பப் பேற்றிற்கும் இன்றியமையாத துணைக்கரணியமாகிய மழையின் சிறப்பைக் கூறுதல்.

11. வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.

(இ-ரை.) வான் நின்று உலகம் வழங்கி வருதலால்-மழை வரையற வாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருவதால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம் மழை உலகிற்குச்சாவாமருந்து என்று கருதப்பெறுந் தன்மையது.