பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

திருக்குறள்

தமிழ் மரபுரை



16. விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
 பசும்புற் றலைகாண் பரிது.

(இ-ரை.) விசும்பின் துளிவீழின் அல்லால் - வானத்தினின்று மழைத் துளி விழுந்தாலன்றி; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது - பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும்.

'மற்று' விளைவு குறித்த பின்மைப்பொரு ளிடைச்சொல். ஆங்கே என்றது தேற்றமும் விரைவும்பற்றிய காலவழுவமைதி. புற்றலை என்பது புன்னிலம் என்றுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம். இழிவுசிறப்பும்மை செய்யுளால் தொக்கது.


17. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
 தானல்கா தாகி விடின்.


(இ-ரை.) நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் - மாபெருங்கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தடிந்து தான் நல்காது ஆகிவிடின் - முகில் (மேகம்). அதனைக் குறைத்துப் பின்பு தான் அதன்கண் பெய்யாது விடின்.


தன்னியல்பு குறைதலாவது மீன் முதலியன கலியாமையும் முத்து முதலியன விளையாமையும். கடலைக் குறைத்தலென்பது அதில் நீரை முகத்தல். இது பண்டை நம்பிக்கை.

“கடல்குறை படுத்தநீர் கல்குறை படவெறிந்து" (20)

என்று பரிபாடலும்.

"இலங்க லாழியி னான்களிற் றீட்டம்போற்
கலங்கு தெண்டிரை மேய்ந்து கனமழை” (சீவக.32)

என்று சிந்தாமணியும் கூறுதல் காண்க. முகப்பது முகில். முகந்தபின் மேலெழுவது எழிலி. கடல்நீர் ஆவியாக மாறி மேலெழுவது முகிலாவதால், பண்டை நம்பிக்கையும் ஒருமருங்கு உண்மையானதே. மழைக்கு மூலமாகிய மாபெரு நீர்நிலைக்கும் மழை வேண்டும் என்று மழையின் சிறப்புக் கூறிய வாறு. உம்மை சிறப்பும்மை.