பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்பு

49



18.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.

(இ-ரை.) வானம் வறக்குமேல் - மழை பெய்யாவிடின்; ஈண்டு வானோர்க்கும் பூசனை சிறப்பொடு செல்லாது - இவ் வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டைவிழாவும் நடைபெறா.

அன்றாடு பூசை, கதை நிகழ்ச்சி குறியாதும் கொண்டாட்டமின்றியும் ஒருசிலரான அக்கம் பக்கத்தார் மட்டும் கலந்தும் கலவாமலும் வழக்கம்போற் சிற்றளவான வழிபாடாகக் கோவிற்குள் மட்டும் நடைபெறுவது; ஆட்டைவிழா, ஒரு கதை நிகழ்ச்சி குறித்தும் கொண்டாட்டத்துடனும் நாட்டு மக்களையெல்லாம் வரவழைத்தும், பேரளவாக ஊர்வலஞ்செய்து நடை பெறுவது. உம்மை உயர்வுசிறப்பு.

பூசுதல் = கழுவுதல், தெய்வப் படிமையை நீரால் துப்புரவாக்குதல். பூசு - பூசி. பூசித்தல் = பூச்சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல். உழவு என்பது பயிர்த்தொழிலின் பின்வினைகளையும் குறித் தல்போல், பூசித்தல் என்பது வழிபாட்டின் பின்வினைகளையும் குறித்தது.

பூசி - பூசை. ஒ.நோ: ஆசு (பற்று)-ஆசி (அவாவு) - ஆசை (அவா). பூசை - பூசனை - பூசனம். ஐ, அனை, அனம் என்பன தமிழ் ஈறுகளே. பூசை - பூசாரி. ஆரி தலையாரி என்பதிற்போல் ஓர் ஈறு. பூசாச்சாரி (பூசை+ ஆச்சாரி) என்னும் வழக்கு வடமொழியிலு மில்லை.

பூ செய் என்பது பூசை என்றாயிற்றென்று கொள்வது பொருந்தாது.

பூசி-பூஜ் (வ). பூசை-பூஜா (வ). பூசனம் - பூஜன (வ). பூசனை - பூஜ்னா (வ).

வேத ஆரியர்க்கு வேள்வி வேட்டலேயன்றிப் படிமைப்பூசையும் கோவில் வழிபாடும் இல்லை. பூஜ் என்னும் சொல்லும் வேதத்திலில்லை. பாரதம் முதலிய பிற்கால வடபனுவல்களிலேயே அது வழங்குகின்றது.


19.

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

(இ-ரை.) வானம் வழங்காது எனின் - மழை பெய்யாவிடின்; வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - இப் பரந்த வுலகின்கண் அறக் கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.