பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

திருக்குறள்

தமிழ் மரபுரை



தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப்பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும், அருளுடைமை கரணியமாக, இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது, ஐம்புல வடக்கம்பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்கல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன.

"மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்" (70)

என்று திருவள்ளுவரும்,

"முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து"

என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக் கொடுப்பது; தவம் தன்னை ஒடுக்குவது.

தானம் என்பது தென்சொல் லென்பதை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக.

20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

(இ-ரை.) யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்றி உலக வாழ்வு நடவாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந் நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் மழை யின்றி நிகழாது.

உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் ஒப்புயர்வற்ற வேந்த னாயினும், மழையின்றி வாழும் வழியில்லை யென்பதாம்.

அதி. 3 - நீத்தார் பெருமை

அதாவது, இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழைபெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப் பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந் துணை யாகும் அறிவாற்றல் மிக்கவரும். மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்-