பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை

53


'இந்திரனே சாலுங் கரி” யென்றார்" என்று பரிமேலழகர் அகலிகை சாவிப்புக் கதையை இங்கெடுத்துக் காட்டியது பொருந்தாது, அவள் கணவனான கோதமன் ஐந்தவித்தா னல்லன் ஆகலின்.

"இந்திரன் சான்று என்றது. இவ் வுலகின்கண் மிகத் தவஞ் செய்வார் உளரானால். அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியன் என்றவாறு" என்று மணக்குடவரும்,

"ஈண்டுத் தன் பதங் கருதித் தவஞ்செய்யும் நீத்தார்மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வமகளிரை விடுத்து, மற்று அத் தவமழித்துந் தவம் அழியாமை நிலைநிற்கையாலும், தனது பதம் விரும்பாமையாலும், தானே சான்றாய் அமையும் என்றவாறு” என்று காளிங்கரும் கூறிய விளக்கம் ஒருவாறு பொருந்தும்.

ஆயினும், ஆசிரியர் கருதிய கதை ஒன்றிருத்தல் வேண்டும். அது இன்று அறியப்படவில்லை. இந்திரன் என்பது வேந்தன் என்னும் தென் சொற்கு நேரான வடநாட்டுச் சொல். வேந்தன் மருதநிலத் தமிழ்த் தெய்வம்.

"வேந்தன் மேய தீம்புன லுலகமும்"

(தொல்.951)

26.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

(இ-ரை.) செயற்கு அரிய செய்வார் பெரியர் - உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.


"செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோக வுறுப்புகள்" என்பர் பரிமேலழகர். எண்வகை ஓக உறுப்புகள் ஒழுக்கம் (இயமம்), தவம்(நியமம்), இருக்கை (ஆசனம்). வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை(தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை(சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும் நிறையுமான மனவடக்கம் சிறந்ததாம்.

“வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும்
        வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
       விண்ணவரை யேவல்கொளலாம்