பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை

55


செவி என்னும் அறிவுப்பொறியைந்தும், அவற்றைப்போல் உடம்பின் கூறாகிய நாவு, கை, கால், அண்டி (எருவாய்), குறி(கருவாய்) என்னும் கருமப்பொறியைந்தும் ஆக இருபதுமாம். இனி, 'வகைதெரிவான் கட்டு' என்றதினால், தெரிகின்ற ஆதனும்(புருடனும்), அவன் தெரிதற் கருவியாகிய மதி(மான்) தன்முனைப்பு(அகங்கார) மனங்களும், அவற்றிற்கு முதலாகிய சித்தமும்(மூலப்பகுதியும்) பெறப்படும்.

இவற்றை ஆராயும் வகை:

ஆதன் தான் ஒன்றினின்று தோன்றாமையாலும் பிறிதொன்றைத் தோற்றுவியாமையாலும் தனிநிலையாம்.

மூல முதனிலை(சித்தம்) தான் ஒன்றினின்று தோன்றாமையால் முதனிலையாம்.

மதியும் அதனின்று தன்முனைப்பும் அதனின்று பூத மூலங்களுமாக ஏழும் மூல முதனிலையினின்று முறையே தோன்றுவதனாலும் மன முதலியவற்றைத் தோற்றுவித்தலாலும் இடைநிலையாம்.

மனமும் அறிவுப்பொறிகளும் கருமப்பொறிகளும் பூதங்களுமாகிய பதினாறும், இடைநிலையினின்று தோன்றுவதனாலும் வேறெவற்றையும் தோற்றுவியாமையாலும் இறுதிநிலையாம்.

இனி, சாங்கியத்திற்கு மாறாக,

"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு"

என்றமையால், எல்லாவற்றொடுங் கலந்துநின்று அவற்றையியக்கி முத்தொழிற்படுத்தும் இறைவனென்னும் முழு முதனிலையொடு சேர்க்க.. மெய்ப்பொருள்கள் மொத்தம் இருபத்தாறாம். ஆகவே, "சாங்கிய நூல்கள் ஓதியவாற்றான் ஆராய்தல்" என்பது தவறாம். நுண்ணிய அடிப்படைப் பாகுபாட்டில், ஆவிவடிவான உயிராதனும் (சீவாத்துமாவும்) பரவாதனும் (பரமாத்துமாவும்) காற்றுள் அடங்குதலால், ஐந்தின் வகையென்று எல்லாவற்றையும் அடக்கினார் ஆசிரியர். வெளி என்னும் இடத்தின் உண்மை நீட்சி அல்லது தொடர்ச்சியே காலம்.