பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

திருக்குறள்

தமிழ் மரபுரை


ஐம்பூதங்களும் அவற்றொடு தொடர்புள்ள பொறிபுலன்களும்

பூதம் பூதத்தன்மை பொறி புலன்
நிலம் நாற்றம் மூக்கு முகர்தல்
நீர் சுவை வாய் சுவைத்தல்
தீ ஒளி கண் காண்டல்
வளி ஊறு மெய் உறுதல்(தொடுதல்)
வெளி ஓசை செவி கேட்டல்

"வகை தெரிவான் கட்டு" என்றது உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்தி; அதாவது, ஓர் உண்மையை அல்லது நெறியை வெளிப்படையாகக் கூறாது ஒரு சொல்லாட்சியாற் பெறவைத்தல். கண்ணது - கட்டு (கண் + து).

மூலப்பகுதியின் சேர்க்கையாற் கட்டுற்ற ஆதன்(புருடன்) அதைத் தன்னின் வேறாகக் காண்டலே வீடுபேறென்பது சாங்கியக் கொள்கை. அதிற் கடவுட் கொள்கையில்லை.

28.

நிறைமொழி மாந்தர் பெருமை
நிலத்து மறைமொழி காட்டி விடும்.

(இ-ரை.) நிறைமொழி மாந்தர் பெருமை - பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண் கூடாகக் காட்டிவிடும். இக் குறள்,

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" (1434)

என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் தழுவியது. மறைமொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்பும் என இருவகைப்படும். திரு மூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் வாய்மொழி போல்வன; கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச் சோலையொன்றில் வம்பப் பரத்தையும் வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு. மறை(வேத)த் தன்மையுடைய மொழி மறைமொழி; மனத்திண்மையாற் கருதியது நிறைவேறும் மொழி மந்திரம். மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் - மன். திரம் = திறம். ஒ.நோ: மன்று - மந்து - மந்தை. முரி - முறி(வளை).

ஆரியர் வருகைக்கு முற்பட்டதும், எண்வகை வனப்பான பாட்டு. உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழுநிலத்திற்கும்