பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை

57


இலக்கியமா யிருந்ததுமான முதலிரு கழகத் தூய தமிழிலக்கியம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதென அறிக.

29.

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.

(இ-ரை.) குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - நற்குணத் தொகுதி என்னும் மலையின் கொடுமுடியேறி நின்ற முனிவரின் கடுஞ்சினத்தை கணமேயும் காத்தல் அரிது - சினக்கப்பட்டாரால் நொடி நேர மேனுந் தடுத்தல் முடியாது.

குன்று சிறுமலை. இங்கு மலையென்னும் பொதுப் பொருளது. எரிக்கும் நெருப்புப் போன்றது வெகுளி. வேகு - வெகுள் - வெகுளி. திண்மையும் பெருமையும் வண்மையும்பற்றி நற்குணத் தொகுதியை மலையாகவுருவகித்தார். இக்குறட்கு. நற்குணமலையாகிய முனிவர் நொடி நேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லையென்று பொருள் கூறுவாருமுளர். அது உரையன்மை, முந்தின குறளாலும் "சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம்" (பால. தாடகை. 71) என்னுங் கம்பர் கூற்றாலும் கண்டு தெளிக. உம்மை இழிவுசிறப்பு.

30.

அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.

(இ-ரை.) எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டொழுகுதலால்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே.

அந்தணர் என்னுஞ் சொல் அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லா வுயிர்களிடத்தும் இரக்கங் கொண்டு அன்பு செய்தல். இது துறவியர்க்கே இயலும். அதனால், அருளுடைமையைத் துறவுநிலைக்குரிய முதலறமாகக் குறித்தார் திருவள்ளுவர். தமக்கு வாழ்வளித்துக் காக்கும் தலைநாகரிக மக்களையுந் தாழ்வாகக் கருதும் தந்நல ஆணவப் பிராமணர் அந்தணராகார் என்பது, இதனால் அறிவிக்கப்பட்டது. பூணுதல் நோன்பாக மேற்கொள்ளுதல். 'என்போர்' செயப்பாட்டுவினை செய்வினையாக நின்றது. 'மற்று' அசைநிலை. உம்மை முற்றும்மை.