பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - மக்கட்பேறு

77


எனப்பட்டாரென்றும் அச் சுரை சாவைத் தவிர்த்ததனால் அம்ருத எனப் பெயர் பெற்றதென்றும், கதை கட்டிவிட்டனர். அதைக் குருட்டுத்தனமாய் நம்பிய தமிழர், விண்ணுலகப் பொருளெல்லாம் மண்ணுலகப் பொருளினும் மிகச் சிறந்தவை யென்னும் பொதுக் கருத்துப்பற்றி, தலைசிறந்த இன்சுவை யுண்டியை அமிழ்து என்றும் அமிழ்தினும் இனியது என்றும், சொல்லத் தலைப் பட்டனர். அம்ருத என்னும் வடசொல் வடிவம் கிரேக்கத்தில் (ambrotos) என்றும், ஆங்கிலத்தில் (ambrosia) என்றும் திரியும்.

65.

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.

(இ-ரை.) மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - பெற்றோர்க்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம்; அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அவரது மழலைச்சொற் கேட்டல் தம் செவிக்கு இன்பம்.

'மற்று' வினைமாற்று. இங்கு இன்பத்திற்குக் கரணியம், பெற்றோரின் காதலொடு குழந்தைகளின் உடம்பு நொய்ம்மையும் குரல் மழலைமையுமாம்.

66.

குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்.

(இ-ரை.) தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர்; குழல் இனிது யாழ் இனிது என்ப - புல்லாங்குழலிசை இனிதென்றும் செங்கோட்டியாழிசை இனிதென்றுங் கூறுவர்.

'குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். ஈரிசையினும் மழலைச்சொல் இனிதென்பது காதல்பற்றிய உயர்வுநவிற்சியே. செங்கோட்டியாழ் குடத் தின்மேல் தோல் போர்க்கப்பட்ட பண்டை வீணை.

67.

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

(இ-ரை.) தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்யவேண்டிய நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றோ ரவையின்கண் முதன்மையாயிருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமானாக்குதல்.