உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எதிர்காலம்

55


 இங்ஙனமே, முன்வருதல் என்னும் பொருளில் உது, குது, -, துது, நுது, புது, முது என்றும்;

கூரிய நுனியாற் குத்துதல் என்னும் பொருளில் உள், குள், சுள், துள், நுள், புள், முள் என்றும்;

வளைந்தியங்குதல் என்னும் பொருளில் உருள், குருள், சுருள், (துருள்) . நுருள், புருள், முருள் என்றும்;

துளைத்தல் அல்லது துளை என்னும் பொருளில் உளை, குழை, -, துழை, நுழை, புழை, முழை என்றும்;

துருவுதல் என்னும் பொருளில், உருவு, குருவு, சுருவு, துருவு. -, புருவு, - என்றும்;

இங்ஙனமே பிறவாறும், ஏழடிகளினின்றும் சொற்கள் தோன்றியிருத்தல் காண்க. இங்ஙனம் சொற்கள் அமைந்திருத்தலை வேறெம் மொழியிலுங் காணமுடியாது. பழம்பாண்டி நாடான பண்டைத் தமிழகம் முழுதும் முழுகிப் போனமையாலும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட இலக்கியமனைத்தும் அழிவுண்டமையாலும், இருவகை வழக்கினின்றும் பல இணைப் பண்டுச் சொற்களை எடுத்துக்காட்ட இயலவில்லை என அறிக.

இற்றை நிலையதே பண்டைத் தமிழும் என்று கருதிக் கொண்டும், சமற்கிருதத்தை உண்மையில் தேவமொழி யென்று நம்பிக்கொண்டும், திரவிட மொழியாளரெல்லாம் தமிழின் தலைமையை ஒப்புக் கொள்வதில்லை. ஆரிய மயக்கும் இதற்கொரு காரணம். பொருளிலக்கணமும் எழுநிலத்தெழுந்த பண்டைச் செய்யுளிலக்கியமும் முத்தமிழ்ப் புணர்ப்பும் திரவிட மூலங்காண்டற் கேற்ற வரலாற்றுக் குறிப்பும் திருக்குறளும், தமிழின் தலைமையை நாட்டப் போதிய சான்றுகளாம். இனி, தமிழ்ச்சொற்களின் செம்மையும் திரவிடச் சொற்களின் கொடுமையும், துணைச்சான்றுகளாம்.

தமிழ்மொழியின் வளர்ச்சிநிலைகள்,

(1) அசைநிலை - (Isolating or Monosyllable Stage)

(2) புணர்நிலை - (Compounding Stage)

(3) பகுசொன்னிலை - (Terminational Stage)

(4) கொளுவுநிலை - (Agglutinative Stage)

(5) பிரியாநிலை - (Inflexional Stage)

(6) தொகுநிலை - (Synthetic Stage)