உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

வடமொழி வரலாறு


(2) தன்மையொருமைப் பெயர், வேற்றுமையடியில் (Oblique base) me, my என்று ஆங்கிலத்திலும், me, mihi என்று இலத்தீனிலும், eme, emoi என்ற கிரேக்கத்திலும், மாம், மயா என்று சமற் கிருதத்திலும், திரிந்திருப்பதால், அதன் எழுவாயடியும் முதற்காலத் தில் மகர முதலியாகவே யிருந்து, அது வழக்கற்றுப் போனபின் வேறொரு (அகரமுதற்) சொல் ஆட்சிக்கு வந்திருக்கலாம். அவ் வகர முதற்சொல் மனத்தைக் குறிக்கும் அகம் என்னும் தமிழ்ச் சொல்லாகவு மிருக்கலாம். மனம் ஆதனையும் (soul) ஆதன் தன்னையும் (self) குறிப்பது இயல்பே.

(3) நும் என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர் வேற்றுமை யடியை எழுவாய்ப் பெயரென்று தொல்காப்பியர் (தவறாகக்) குறித்திருப்பதால், அதுவே மராத்தி இந்தி முதலிய வடநாட்டு மொழிகளில் தும் (நீர்) என்று திரிந்திருக்கலாம். நூம் என்பது தும் என்றாயின், நூன் என்பது துன் என்றாவது இயல்பே. நீன் என்பது நீ என்று கடைக்குறைந்தது போல், துன் என்பதும் து என்று

கடைக்குறைந்தது.

முன்னிலை யொருமைப்பெயர் தியூத்தானியத்திலும் இலத் தீனிலும் து, தௌ என்று சற்றே திரிந்தும், வேத ஆரியத்தில் த்வம் என்று மிகத் திரிந்தும்; கிரேக்கத்தில் சு என்று போலியாக மாறியும் உள்ளமை காண்க.

(4) தியூத்தானியத்திலும் இலத்தீனிலும் இருமையெண் இன்மையால், அது கிரேக்கத்திலேயே தோன்றி வேத ஆரியத்திலும் சமற்கிருதத்திலும் தொடர்ந்திருத்தல் வேண்டும்.

மராத்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளிலும் இருமையெண் இல்லை. அம் மொழிகளை ஆரியமென மயங்கி, அவற்றில் இருமையெண் இறந்துபட்டதென்பது திரிபுணர்ச்சியே. தியூத்தானியத்திலும் அது மறைந்ததென்பது பொருத்தமானதன்று.

இவ் வுண்மை பின்னரும் சொல்லியலில் விளக்கப் பெறும்.

(5) தமிழ்த் தன்மையிடப் பெயர்களுள், ஏன் ஏம் என்னும் உயிர்முதற் சொற்கட்கும் நான் நாம் என்னும் நகரமுதற் சொற்கட்கும் இடையில், யான் யாம் என்னும் யகரமுதற் சொற்கள் இருப்பது போன்றே, ஆரிய முன்னிலை யிடப்பெயர்களுள்ளும் ye, you, yuyam என்னும் யகரமுதற் சொற்கள் உள்ளனவென அறிக.

(6) தகரம் சகரமாகவும் சகரம் ஹகரமாகவும் திரிதல் இயல் பாதலால், அதன் (தெ.), அது, அதி (தெ.) முதலியவற்றின் தகர வடியே, சகரமுதலாகவும் ஹகரமுதலாகவும்

ஆரிய மொழிகளில்

திரிந்திருத்தல் வேண்டும்.