உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

ix

முகவுரை

மாந்தன் அறிவு வளர வளரப் புதுப்புதுக் கலைகள் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. அவற்றுள் மொழி ஒன்று.

கணிதமும், அறிவியலும் எங்ஙனம் திட்டமும் துல்லியமுமான நூற்கலையோ, அங்ஙனமே மொழிநூலும். ஆயின், கணிதம் முற்றும் அறிவியல் ஒருவாறும் நிறைவடைந்து விட்டன; மொழிநூல் இன்னும் அடையவில்லை.

ஒவ்வொரு நூற்கலைக்கும், (1) ஆய்வுநிலை (Empircal stage), (2) பாகுபாட்டு நிலை (Classificatory stage), (3) முடிபுநிலை (Theoritical stage), என முந்நிலைகளுண்டு. அவற்றுள், முதலிரு நிலைகளே மொழிநூல் அடைந் துள்ளது. இக்குறைபாட்டைச் சில ஆய்விலிகளும் அடிமை மனப்பான்மையரும் பயன்படுத்திக் கொண்டு, மொழிநூல் முற்றும் பாணிப்புக்கலை என்றும், மொழியாராய்ச்சி பயனில் முயற்சியென்றும், கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு நூற்கலைக்கும் சில பல நெறிமுறைகள் உள. அவற்றைக் கண்டுபிடிக்கும்வரை, ஆராய்ச்சியாளர் அடி சறுக்குவதும் குன்றுமுட்டிய குரீஇபோல் இடர்ப்படுவதும் இயல்பே. நெறிமுறைகளைக் கண்டுவிடின், கதிரவன் முன் காரிருள்போல் அனைத்திடர்ப்பாடும் அகன்றுவிடும்.

அறிவுப் பெருக்கமும் ஆராய்ச்சிவன்மையும் ஒருங்கே கொண்ட மேனாட்டார்க்கும் மொழிநூல் நெறிமுறைகள் முற்றத்தெரியாதபோது, நூற்றுக்குத் தொண்ணூறு தற்குறி களும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையான மூடக் களஞ்சியங் களும் பகுத்தறிவில்லா உருவேற்றிகளும் குடிகொண்ட இந் நாட்டில், மொழி நூலைப்பற்றித் தவறான கருத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.

மொழியானது இந்நாட்டிற் பொதுவாய்க் கருதப்படுகிறபடி, இறைவனாற் படைக்கப்பட்டதன்று; இயற்கையாய் உள்ளது மன்று; மாந்தனால் ஆக்கப்பெற்றதே. ஆயின், ஒருவனால்