உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

vii

ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பொதுவான சில ஆங்கிலச் சொற்கள் அகப்பட்ட துடன், அவற்றின் வாயிலாகவோ, அவற்றின் மூலமாகவோ இனமாகவோ உள்ள சில இலத்தீன் (Latin) கிரேக்கு (Grees)ச் சொற்களும் அகப்பட்டன. பின்பு இலத்தீன் கிரேக்கு அகராதிகளைத் துருவினேன். வேறு சில சொற்களும் எனக்குத் துணையாயின. அவற்றுள் navis (நாவாய்), amor (அமர்-அன்புகூர்) முதலிய இலத்தீன் சொற்களும், telos (தொலை-தூரம்), palios (பழைய) முதலிய கிரேக்குச் சொற்களும் எனக்குப் பெரிதும் வியப்பை யூட்டின. இவற்றுடன், தமிழ் இந்திய-ஐரோப்பிய மூலமொழிக்கு மிக நெருங்கியதென்று, கால்டுவெல் (Caldwell) கூறியிருப்பதையும்,அவரும் குண்டர்ட்டும் (Gundert) வடமொழியிலுள்ள திராவிடச்சொற்களிற் சிலவற்றை எடுத்துக்காட்டியிருப்பதையும், பண்டைத் தமிழகம் தென்பெருங் கடலில் அமிழ்ந்துபோன குமரிநாடென்றும், அந் நாட்டிலேயே தமிழர் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்தனரென்றும், தமிழ்த் தொன்னூல்கள் கூறுவதையும், மாந்தன் முதன்முதல் தோன்றினது இலமுரியா (Lemuria-குமரிநாடு) என்று வியன்புலவர் எக்கேல் (Haeckel) கூறியிருப்பதையும், தமிழ் உலகமொழிகள் எல்லாவற்றிலும் எளிய வொலிகளைக்கொண்டு இயற்கைத் தன்மையுள்ளதாய், அதன் சில பல சொற்கள் பல மொழிகளிலும் கலந்து கிடப்பதையும், சேர நோக்கினபோது, தமிழின் தொன்மை, முன்மை,தாய்மை, தலைமை முதலிய தனிப் பண்புகள் புலனாயின. பின்பு மொழிநூற்றுறையில் ஆழ இறங்கினேன்.

நான் மொழிநூற்பயிற்சி தொடங்கியதிலிருந்தே, அவ்வப் போது என் ஆராய்ச்சி முடிபுகளைச் ‘செந்தமிழ்ச் செல்வி’, 'தமிழ்ப் பொழில்' என்னும் இரு திங்கள் இதழ்களிலும், கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்து வந்திருக்கிறேன். அவை சிலரை மகிழ்வித்தன; சிலர்க்குச் சினமூட்டின. ஒரு நாட்டில் ஒரு புதுக் கலை தோன்றும்போது, பலர் அதில் அவநம்பிக்கை கொள்வதும், அக் கலையைக் கூறுவாரை வெறுப்பதும் இயல்பே. மொழிநூற் கலை மேனாட்டில் தோன்றி இரு நூற்றாண்டுகளாயினும், இன்னும் அது குழவிப் பருவத்திலேயே இருப்பதையும், இந்தியர்க்குப் பெரும்பாலும் தெரியா திருப்பதையும் நோக்குமிடத்து, எனது மொழிநூன் முடிபை வெறுப்பாரை நோக்கி வருந்துவதற்கு எள்ளளவும் இடமில்லை. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் உலக முழுமைக்கும்