உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

ஒப்பியன் மொழிநூல் மொழிநூற் கதிரவனாய் விளங்கிய மாக்கசு முல்லரைக் கூடப் பலர், விதப்பாய் அமெரிக்கர், குறைகூறியும் கண்டனஞ்செய்தும் வந்தனர். அதற்கு அவர் அணுவளவும் அசையவில்லை; ஒரு கலையின் தொடக்கத்தில், அதைப்பற்றி எழும் நூல்களிற் பல பிழைகள் நேர்வது இயல்பு. அவற்றை அறிஞர் எடுத்துக் கூறுவதும், ஆசிரியர் அவற்றைத் திருத்திக்கொள்வதும், அக் கலைவளர்ச்சிக் கின்றியமையாத கடமைகளாகும்; இதனால், சில போலிப் பிழைகள் விளக்கம் பெற்று உண்மை வடிவங் கொள்ளும்; பொறாமை யொன்றே காரணமாகக் கூறும் சிலரின் வெற்றொலிகளும் ஒரு நிலையில் அடங்கிவிடும். என் கட்டுரை களிற் சில பிழைகளிருந்தன என்பதை இன்று உணர்கின்றேன். ஆயினும், அவை என் பெருமுடிபுகளைத் தாக்காதவாறு மிகமிகச் சிறியனவே. உண்மையைப்பற்றிக் கொண்ட ஆராய்ச்சி யாளன், ஊக்கமாய் உழைப்பின், முதலிலும் இடையிலும் தவறினாலும் இறுதியில் வெற்றிபெறுவது திண்ணம்.

மொழிநூலானது உலக மொழிகள் எல்லாவற்றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும், ஆரியம் (Aryan), சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர். அவற்றுள், துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திரவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல். இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டியுள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந் நூலின் நோக்கம். அவற்றுக்கொரு தொடர்புண்டென்று, அஃதாவது, அம் மூன்றும் ஒரு மூலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திட்டமாய்க் கூறிவிட்டார். அம் மூலத்திற்குத் திரவிடம் மிக நெருங்கிய தென்று கால்டுவெல் கூறியுள்ளனர். இக் கூற்றை என்னா லியன்றவரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன்.

இந் நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆசுத்திரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்களாகத் தொடர்வது; அவற்றுள், இப் பொத்தகம் முதல் மடல முதற்பாகம், தமிழைப்பற்றிக் கூறுவது. இரண்டாம் பாகம் பிற திராவிட மொழிகளைப்பற்றிக் கூறும். இவை தமிழில் வெளிவந்தபின் ஆங்கிலத்திலும் வெளிவரும்.