உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

ஒப்பியன் மொழிநூல்

தம் மொழிகளிற் பெயர்த்துத் தமிழர்க்கறிவித்தனர். இப்போது உண்மை வெளியாகிவிட்டதேயென்று, ஆரியர் தம் முன்னோர் கி.மு. 2500 ஆண்டுகட்குமுன் இயற்றிய எளிய மறைமொழிகட்கு, இவ் விருபதாம் நூற்றாண்டிற்குரிய விழுமிய கருத்துகளை யெல்லாம் பொருத்தியுரைக்கின்றனர். இதன் பொருந்தாமை ஆராய்ச்சியில்லார்க்குப் புலனாகாதுபோயினும், அஃதுள்ளார்க்குப் போகாதென்க.

வடதிசை உயர்ந்தும் தென்திசை தாழ்ந்ததும்

அகத்தியர் தெற்கே வந்தபின், நிலம் வடதிசையில் உயர்ந்ததும் தென்திசையில் தாழ்ந்ததும் முன்னர்க் கூறப்பட்டது. இங்ஙனமே, கல்வி, கைத்தொழில், வாணிகம், செல்வம், அலுவல், அதிகாரம் முதலிய பிறவற்றிலும் அவ்விரு திசைகளும் (ஆரியமும் திராவிடமும்) முறையே உயர்ந்தும் தாழ்ந்தும் போயினவென் றறிந்துகொள்க.

மேற்கு கிழக்கு என்னும் திசைப் பெயர்கள் போன்றே, உத்தரம் (வடக்கு) தக்கணம் (தெற்கு) என்னும் திசைப் பெயர்களும் ஏற்ற விறக்கங்களை யுணர்த்துவது பின்னர்க் கூறப்படும்.

கன்னடத்தில் இலக்கியம் தோன்றியது கி.பி. 8ஆம் நூற்றாண்டென்றும், தெலுங்கில் தோன்றியது கி.பி. 10ஆம் நூற்றாண்டென்றும், மலையாளத்தில் தோன்றியது கி.பி. 13ஆம் நூற்றாண்டென்றும் சொல்லப்படுகின்றது. தமிழிலக்கியம் தோன்றிய காலம் இன்ன நூற்றாண்டென்று வரையறுத்துக் கூற இயலாதவாறு, அத்துணைப் பழைமையாயிருத்தலின், திராவிட மொழிகளில் தமிழே மொழியாயினும் நூலாயினும் - மிகத் தொன்மை வாய்ந்ததென்பதைச் சொல்ல வேண்டுவதேயில்லை.

தமிழின் திருத்தம்

திராவிட மொழிகட்குள் தமிழ் மிகத் திருந்தியதென்பது, அதன் சொல் வடிவங்களாலும் இலக்கணச் சிறப்பாலும் அறியப்படும். தமிழ்ச்சொல் வளம்

(1) தமிழின் வளம்

தமிழின் சொல்வளத்தைத் தமிழரே இன்னும் சரியாய் உணர்ந்திலர்.