உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

ஒப்பியன் மொழிநூல்

என்பதால், செந்தமிழ்நாட் டெல்லை தாண்டிய பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ்நாடு என்பதும், அவற்றுள் விதப்பாய் வழங்கிய சொற்கள் திசைச்சொற்கள் என்பதும் பெறப்படும்.

கொடுந்தமிழ்நாடு

கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டையும்,

"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்”

என்னும் வெண்பாவிற் குறிக்கப்பட்டனவாகக் கூறுவர் பல உரையாசிரியர். இவையெல்லாம் முதற்காலத்தில் செந்தமிழ் நாட்டின் பகுதிகளாகக் கொள்ளப்பட்டமையின், இவ் வுரை பொருந்தாது. இந் நாடுகளுள் வேணாடு புனனாடு என்ற இரண்டிற்குப் பதிலாக, பொங்கர்நாடு ஒளிநாடு என்பவற்றைக் குறிப்பர் இளம்பூரணர், சேனாவரையர் முதலியோர். பொங்கர் நாட்டைப் பொதுங்கர் நாடென்பர் இளம்பூரணர்.

"தாயைத் தள்ளை என்ப குடநாட்டார். நாயை ஞமலி என்ப பூழிநாட்டார்" என்று திசைச்சொற்குக் காட்டுக் கூறினர் இளம்பூரணர். இங்குக் குறிக்கப்பட்ட இருநாடுகளும் இப்போது மலையாள நாட்டின் பகுதிகளாக வுள்ளன.

நச்சினார்க்கினியர் பின்வருமாறு திசைச்சொற்குக் காட்டுக்

கூறினர்:

"தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பனவற்றைப் பெற்றம் என்றும்; குடநாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை ஞெள்ளை என்றும்; குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும்; கற்காநாட்டார் வஞ்சரைக் கையர் என்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும், தம்மாமியென்பதனைத் தந்துவை என்றும்; பூழிநாட்டார் நாயை ஞமலி என்றும், சிறுகுளத்தைப் பாழி என்றும்; அருவாநாட்டார் செய்யைச் செறு என்றும், சிறுகுளத்தைக் கேணி என்றும்; அருவா வடதலையார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப.