உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

37

குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த காலமுமுண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும். தமிழ்நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றியபின்பாதலின், குறிஞ்சியில்மட்டும் மக்களிருந்த தொன்னிலை அப்போது மறைந்துபோயிற்று. அதனாற் குறிக்கப்படவில்லை. ஆயினும் அதைக் கருத்தளவையான் அறிந்துகொள்ளலாம்.

மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த்தானிருந்திருக்க வேண்டும். அவரையே ஆதம் ஏவையென்று கிறித்துமதமும் இஸ்லாம் மதமுங் கூறுகின்றன.

இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய பின், குறிஞ்சியில் இடம்போதாமல், சிலர் முல்லைக்குச் சென்றனர்.

முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலா யிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டையாடியும் உண்டுவந்த மக்கள், இயற்கையாய் விளையும் மரவுணவு போதாமையாலும், வேண்டியபோதெல்லாம் ஊனுணவு கிடையாமையாலும், செய்கையாய்ப் பயிர்பச்சைகளையு ம் விலங்குகளையும் வளர்க்கத்தொடங்கினர். இதற்கு மரமடர்ந்த குறிஞ்சி வசதியாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குகட்கும் ஓரளவு தப்பினர்.

மாந்தன் முதன்முதலாய் வளர்த்த விலங்கு ஆவே. ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம். மா என்று கத்துவது மாவெனப்பட்டது. மா- மான்-மாடு. மா என்பது னகர மெய்யீறு பெற்று, ஆவிற்கினமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப்பெயரா யிருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா(ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப்பெயராயிற்று. ஆ என்பது னகர வீறுபெற்று ஆன் என்றாயிற்று.

மரவுணவும் ஊனுணவும் மக்கட்கு வேண்டியவாயுள்ள மையின், உழவும் ஆவோம்பலும் ஒருங்கே தோன்றினவென் னலாம். ஆவானது பால் தந்ததுடன் உழவிற்கு வேண்டிய கன்றுகளையும் ஈன்றது. புல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, சிறிது புன்செய்ப் பயிர்களையும் விளைத்துக் கொண்டனர் முல்லைநிலத்தார்.