உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

ஒப்பியன் மொழிநூல்

ங்

கோழியை வீட்டில் வளர்த்தது பிற்கால வழக்கம். சூரபன்மன் மயிலுங் கோழியுமாகிக் கந்தனுக்கு முறையே ஊர்தியுங் கொடியுமானான் என்றது பிற்காலக் கதை. சேவல் போர் செய்வதிற் சிறந்த பறவையாதலால், அத் தொழிலிற் சிறந்த சேயோனுக்குக் கொடியுருவமாய்க் கொள்ளப்பட்டதென்க.

சேயோனுக்கு முருகன், கந்தன், ஆறுமுகன் என்றும் பெயருண்டு. முருகு என்பது மணம், அழகு, இளமை என்னும் பல பொருள்களை யுடையது. தெய்வத்திற்கு அல்லது பேய்க்கு மணம் விருப்பமென்றும், மலரணிந்துகொண்டாவது மலருள்ள இடத்திலாவது பருவப்பெண்கள் தனிச்செல்லக் கூடாதென்றும், ஒரு கொள்கை தமிழர்க்குள் இன்றும் இருந்துவருகின்றது.

தெய்வம் இயல்பாக அழகுள்ளதென்று எல்லா மதத்தா ராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. றது. இதனால் அழகன் என்று திருமாலுக்கும் சொக்கன் என்று சிவனுக்கும் பிற்காலத்திற் பெயர்கள் தோன்றின. அழகு எப்போதும் இளமையொடு கூடியது. கோவையில் 'நிலைகண்டுரைத்தல்' என்னுந் துறையை நோக்குக.

கந்தன் என்னும் பெயர், கந்தில் (தூணில்) தெய்வவுருவைப் பொறித்த அல்லது செதுக்கிய பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. கந்திற்பாவை என்னும் வழக்கை நோக்குக. கந்தனையே ஸ்கந்தன் என்றனர் வடநூலார்.

ஆறுமுகம் என்னும் பெயர் பின்னர்க் கூறப்படும்.

மருதத்தெய்வம் வேந்தன்

வேந்தன் = அரசன்.

நல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்தபின் மேலுலகத் திற்குச் செல்லுமென்றும், உலகில் (மருதநிலத்தில்) அரசனாயிருந் தவன் மறுமையில் மேலுலகத்திலும் அரசனாவான் என்றும், மருதநில மாந்தர் கருதி, முதன்முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள். மழை மேலிருந்து பெய்வதால், மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிடமிருந்தே வருவதாகக் கருதி, மழைவளத்திற்காகவும் அவனை வழிபட்டார்கள்.