உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல் (துளைத்தற் கருத்துவேர்)

17

நண்டல் = கிண்டிக் குழைத்த வுண்டி. நண்டல் கிண்டிப் படைக்கிறது என்பது உலக வழக்கு.

நண்டற் சோறு = கிண்டிச் சமைத்த பொங்கற் சோறு. நண்டல் பிண்டல் = உண்ணற் காகாவாறு கூழுங் கட்டியுமாகச் சமைத்த சோறு. சோற்றை நண்டல் பிண்டலாக்கி விட்டாள் (உ.வ.).

நண்டு = 1. வண்டலிலும் மணலிலும் கிண்டினாற்போற் கீறிச் செல்லும் நீருயிரி (crab). 2. நண்டு வடிவான கடகவோரை. நண்டு- ஞண்டு (தொல். சொல். 452, உரை).

ம.நண்டு, தெ. எண்டிரி (எண்ட்ரி).

நெண்டு- ஞெண்டு. ஞெண்டுதல் = கிண்டுதல் (சூடா.).

ஞெண்டு = நண்டு. “வேப்புநனை யன்ன நெடுங்கணீர் ஞெண்டு” (அகம். 176).

நொள் - நோள் - நோண்டு. நோண்டுதல் = 1. தோண்டுதல். கண்ணை நோண்டிவிடுவேன், கிழங்கை நோண்டி யெடுத்து விட்டான் (உ.வ.) 2. கிளறுதல் (பிங்.). 3. முகத்தல் (திவா.). 4. குடைந்தெடுத்தல். 5. துருவி வினவுதல். நோண்டிக் கேட்கிறான் (உ.வ.). 6. கையிடுதல். அங்கே என்னத்தை நோண்டிக் கொண்டிருக்கின்றாய்? (உ.வ.). ம. நோண்டுக.

நோண்டு - நேண்டு - நேடு.

ஒ. நோ: தோண்டு- தேண்டு -தேடு.

நேடுதல்

=

I. 1. தேடுதல். “கொண்டவ னிருப்ப மற்றோர்... வேலினானை நேடிய நெடுங்க ணாளும்” (சீவக. 252). 2. பொருளீட்டுதல். 3. விரும்புதல் (யாழ். அக.). 4. எண்ணுதல். "சூரபன்ம னிளவறன் முடிவு நேடி” (கந்தபு. அசுரேந். 65). 5. இலக்காகக் கொள்ளுதல் (W.).

நேடு - நேட்டம் = ஈட்டிய பொருள் (நாஞ்.வ.).

நாளிகேரம் என்னும் சொல் வரலாறு :

வடமொழியில் தென்னைக்கு நாலிகேர என்று பெயர். அதினின்று கேரளம் என்னும் சொல்லைத் திரிக்கவுஞ் செய்வர். நாலிகேர என்பது வடமொழியில் தன்னந் தனிச்சொல். அதற்கு அம் மொழியில் மூலமில்லை. கேரளம் என்பது சேரலம் என்பதன் திரிபாயிருக்கவும், அத் திரிவைத் தலைகீழாகக் காட்டுவது வடமொழியாளர் வழக்கம்.