பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

93



பரிசாலும் முற்றூட்டாலும் நூலாசிரியரைப் போற்றுவதும் அவர்நூல் வழங்குமாறு அரங்கேற்றுவிப்பதும் அரசன் தொழிலாதலின் 'ஆதி' என்றார். "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்” என்று பிராமணரை விலக்கியதால், இங்கு அந்தண ரென்றது தமிழ அறிஞரையே. அந்தணர் என்பது சிறப்பாகத் துறவியரையே குறிக்குமேனும், சிறுபான்மை இல்லறத்தாரையுந் தழுவும்.

"வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்" (தொல்.1564)

என்றதனால், முதற்காலத்து முதனூல்களெல்லாம் முனிவராலேயே இயற்றப் பட்டதாகத் தெரிகின்றது. அதன் பின்பே இல்லறத்தாரான பார்ப்பாரும் நூலியற்றினர். நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார். முனிவர் ஐயர் எனவும் படுவர். கடைக்கழகக் காலத்திலும் இளங்கோவடிகள் என்னும் தமிழ அந்தணர், இயைபுவனப் பியற்றியமை காண்க. அந்தணர் நூற்கு அரசியல் அடிப்படையா யிருந்தமைக்கு முக்கழக நடவடிக்கைகளே போதிய சான்றாம். ஒழுக்கத்திற்கு அது தூண்டுகோலா யிருந்தது. “அச்சமே கீழ்கள தாசாரம்” (குறள். 1075) என்பதனாலும், “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே" (புறம். 312) என்பதனாலும், அறியப்படும் நூற்கும் அறத்திற்கும் முந்தியே யிருந்ததனாலும் நிலைபெற்றதனாலும் 'நின்றது' என்றார்.

“அந்தணர்க் குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது...செங்கோல்”, “அரசர் வணிகரென்னு மேனையோர்க்கு முரித்தாயினும், தலைமைபற்றி அந்தணர் நூலென்றார்” என்பன பரிமேலழகரின் ஆரியப் பிதற்றல்கள். நூலென்றது மறை நூலை மட்டுமன்று. அங்ஙனங் கொள்ளினும் அது கடவுள் வழிபாட்டை அறவே அறியாத ஆரிய வேதத்தையன்று; தமிழ்மறையையே குறிக்கும்.

"மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”

என்று மாணிக்கவாசகர் பாடியிருத்தல் காண்க.

இன்னும் தமிழிலுள்ள பண்டை மறை (மந்திர) நூல்களும் மருத்துவ நூல்களும் சித்தர் என்னும் முனிவர் இயற்றியவையே.

544. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன னடிதழீஇ நிற்கு முலகு.