பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

92

திருக்குறள்

தமிழ் மரபுரை



நடுநிலை இறைக்கு (அரசனுக்கு) இன்றியமையாத குணமாதலின் அதை 'இறை' யென்றும், உயிரினுஞ் சிறந்தாரிடத்தும் கண்ணோட்டம் தகாதென்பார் ‘யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை யென்பது இறையெனக் குறைந்தும், செய்வது என்பது செய்வஃது என விரிந்தும் நின்றன, செய்யுளமைதி நோக்கி. இதனால் செங்கோன்மை யிலக்கணங் கூறப்பட்டது.

542. வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன் கோனோக்கி வாழுங் குடி.

(இ-ரை.) உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும், குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழ்வர்.

நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல். வானால் நீரும் உணவும் கிடைப்பது போல், செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும், பொருட்காப்பும் கிட்டுவதால், வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர் வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் செங்கோலின்றி வானிருந்து பயனில்லை யென்பதும் பெறப்படும். உலகு, கோல் என்பன ஆகுபெயர்கள். கோலென்றது செங்கோலை.

‘குடி’ தொகுதிப்பெயர். வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந் தருவதாம்.

"நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால், யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" (புறம்.26)

என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது.

543. அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்.

(இ-ரை.) அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ அந்தணரும் இயற்றிய பல்துறை நூல்கட்கும் மக்களின் அறவொழுக்கத்தற்கும் அடிமணையாயிருப்பது; மன்னவன் கோல் - அரசனின் செங்கோலே.