பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

91



உள்ளியதை யுள்ளுதலாவது தான் கருதியதைப் பெறும்வரை மறவாது அதுபற்றி முயற்சி செய்தல். 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது. 'மன்’ என்பதை இடைச்சொல்லாகக் கொண்டு, "அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது" என்னும் பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு இவ்விடத்திற்கு ஏற்காமை யுணர்க.

அதி. 55 - செங்கோன்மை அதாவது, அரசனாற் கையாளப்பெறும் நேர்மையான ஆட்சிமுறை. நேர்மையான ஆட்சி நேரான கோல்போ லிருத்தலால் செங்கோல் எனப்பட்டது. குடிகள் ஆக்கள் போலவும் அரசன் ஆயன் போலவுமிருத்தலால், அரசன் கோன் எனப்பட்டான். கோ =ஆ (பசு). கோவன் = (1) ஆயன்.

"கோவனிரை மீட்டனன்" (சீவக. 455)

(2)அரசன், “கோவனும் மக்களும்" (சீவக. 1843)

கோவன் - கோன் - கோ = அரசன். கோன் = ஆயன், அரசன், தலைவன். அரசன் கையிலுள்ள கோல் ஆடுமாடு மேய்க்கும் இடையன் கையிலுள்ள கோல் போன்றது. அச் சின்னத்தின் பெயர் அரசனையாவது அவனாட்சியையாவது குறிக்கும்போது சின்னவாகுபெயராம். கோலின் தன்மை கோன்மை. செங்கோலின் தன்மை செங்கோன்மை. செம்மை = நேர்மை. கோணாமை, நெறியினின்றும் விலகாமை.

“வடநூலாரும் தண்டமென்றார்” என்றார் பரிமேலழகர். வடநூலில் தண்டம் என்பது தண்டிக்கும் அதிகாரத்தைக் குறிக்குமேயன்றி, தமிழிற்போல் அரசாட்சியைக் குறிக்காது. மேலும், அச் சொல்லும் தென்சொல்லே.

செங்கோன்மை சோர்வில்லாத அரசனாலேயே கையாளப்படத் தக்கதாதலின், இது பொச்சாவாமையின் பின் வைக்கப்பட்டது.

541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் தேர்ந்துசெய் வஃதே முறை.

(இ-ரை.) ஓர்ந்து - தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து; யார் மாட்டும் கண்ணோடாது - எவரிடத்தும் சிறப்பாக அன்பு கொள்ளாது; இறை புரிந்து - நடுநிலை பொருந்தி; தேர்ந்து - அக் குற்றங்கட்கேற்ற தண்டனைகளை அறநூலறிஞரொடு நூலுத்தி பட்டறிவொடு பொருந்தத் தீர்மானித்து; செய்வஃதே முறை - அவற்றை நிறைவேற்றுவதே செங்கோல் முறையாம்.