பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - அரசர்க்குச் சிறந்தவை யென்று அறநூலாரும் சான்றோரும் உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அவற்றைச் செய்யாது மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லை.

அரசர்க்குரிய சிறந்த செயல்கள்: வரலாற்றிற் கெட்டாத பண்டைக் காலத்திற் பெருங்கடலில் நாவாய்ப் படை செலுத்திச் சாலித்தீவைக் கைப்பற்றியமை. தூங்கெயி லெறிந்தமை, முக்கழகம் நிறுவியமை, மகனை முறை செய்தமை, சீன நாட்டினின்று கரும்பைக் கொணர்ந்து பயிரிட்டமை, பாரதப் போர்ப்படை யிரண்டிற்கும் பதினெண்ணாளும் பெருங்சோறு வழங்கியமை, ஓரிளைஞன் இருபெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்றமை, முரசுகட்டிலில், துயின்ற புலவனுக்குக் கவரி வீசியமை, பரிசிலனுக்குத் தலையீந்தமை, காவிரியணை கட்டியமை, பேரேரியுங் கிளையாறும் வெட்டியமை, தமிழ் வேந்தரை யிகழ்ந்த வடநாட்டரசரை வென்று பத்தினிக்குப் படிமை நிறுவியமை, வானளாவுங் கோபுரம் எடுத்தமை, துறைநகரமைத்துக் கடல் வாணிகம் பெருக்கியமை போன்றனவும் பிறவுமாம். 'எழுமை' தொகைக் குறிப்பு. "சாதிதரும மாகிய இவற்றின் வழீஇயோர்க்கு உள்ளது நிரையத் துன்பமே" என்று பரிமேலழகர் கூறிய ஆரியக்குறிப்பு இங்கு ஏற்காது.

539. இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

(இ-ரை.) தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சியால் மயங்கும்போது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முன்பு. அத்தகைய மயக்கத்தாற் தம் கடமையை மறந்து கெட்டவரை நினைத்துப் பார்க்க.

கெட்டாரை நினைக்கவே தமக்கும் வருங்கேட்டிற் கஞ்சித் திருந்துவர் என்பது கருத்து. திருந்துதல் மறவாது கடமையைச் செய்தல். 'இகழ்ச்சியிற் கெட்டாரை எண்ணுக' என்று பாடமோதுவர் மணக்குடவர்.

540. உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா னுள்ளிய துள்ளப் பெறின்.

(இ-ரை.) மன் தான் உள்ளியது எய்தல் எளிது – அரசன் தான் கருதிய. பொருளைத் தான் கருதியவாறே பெறுதல் எளிதாம்; உள்ளியது மற்றும் உள்ளப் பெறின் - தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின்.