பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

89



536. இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில்.

(இ-ரை.) இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறதியின்மை எவரிடத்தும் எப்போதும் தப்பாது வாய்க்குமாயின்; அது ஒப்பது இல் - அது போன்ற நன்மை வேறொன்று மில்லை.

செய்ய வேண்டிய வினைகளை உறவினரிடத்தும் பிறரிடத்தும் ஒப்பச் செய்யவேண்டுமாதலின் 'யார் மாட்டும்' என்றும், பெருகிய நிலையிலும் சுருங்கிய நிலையிலும் ஒருதன்மையாகச் செய்ய வேண்டுதலின் ‘என்றும்' என்றும், எல்லா வினைகளிலும் தப்பாது கையாள வேண்டுதலின் ‘வழுக்காமை' என்றும் கூறினார். 'வாய்' என்னும் வினை “வாய்ந்தன ரென்ப" (தொல்.1582). "வாய்ந்த மலையும்" (குறள். 737) என்று மெலிந்தும் புடைபெயர்தலாலும், செயப்படுபொருள் குன்றிய வினையாதலாலும், "வாயி" னென்பது முதனிலைத் தொழிற்பெயரடியாக வந்த வினையெச்சம் என்னும் பரிமேலழகர் கூற்றுப் பொருந்தாது.

537. அரியவென் றாகாத தில்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின்.

(இ-ரை.) பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தினால் எண்ணிச் செய்தால்; அரிய என்று ஆகாத இல்லை - செய்தற் கரியன என்று சொல்லப்பட்டு ஒருவருக்கு முடியாத கருமங்கள் இல்லை.

இது பரிமேலழகர் கல்வியாரவார உரையைத் தழுவியது. மனத்திற்கு அகக்கரணம் என்று பெயரிருத்தலால், 'கருவி' என்பதற்கு அவர் மனம் என்று பொருள் கொண்டார், கரணம் கருவி. இப் பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

'பொச்சாவாக் கருவி' என்னுந் தொடரைப் பொச்சாவாமையாகிய கருவி என்று இருபெயரொட்டாகக் கொள்வதே இயற்கையான முறையாம். இப் பொருட்குப் 'பொச்சாவா' ஈறுகெட்ட எதிர்மறைத் தொழிற்பெயர் போல்வதாம். இடைவிடா முயற்சியும் சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம்.

538.புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்.