பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

88

திருக்குறள்

தமிழ் மரபுரை



533. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு.

(இ-ரை.) பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - கடமை மறந் தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ் வின்மைக் கருத்து அறநூலார்க்கு மட்டுமன்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம்.

இந் நெறிமை (விதி) அரசர்க்கு மட்டுமன்றி எல்லாத் தொழிலர்க்கும் ஒப்ப வரியதா யிருத்தலால், 'உலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு' என்றார். இங்கு உலகம் என்றது தமிழகத்தை. எப்பால் நூலென்றதும் தமிழிலக்கியத் துறைகளையே. இன்றிறந்துபட்டுள்ள பண்டைத் தமிழிலக்கியத்திற் பெரும் பகுதி திருவள்ளுவர் காலத்தில் இறவாதிருந்தது. வடநூலார்க்குந் துணிவு என்று கூறாமையை நோக்குக.

534. அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு.

(இ-ரை.) அச்சம் உடையார்க்கு அரண் இல்லை - உள்ளத்தில் அச்ச முடையவர்க்கு மதில் காடு மலை முதலிய அரண்களிருப்பினும் அவற்றால் பயனில்லை; ஆங்கு - அதுபோல; பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை - மறவியுடையார்க்குப் படை, செல்வம் முதலிய நலங்களிருந்தும் அவற்றாற் பயனில்லை.

அச்ச முடையார்க்கு அழிவு நேர்வதுபோல் மறவியுடையார்க்கும் நேர்வது உறுதி என்பது கருத்து. நன்மைக்கேதுவானது நன்கு. நல் - நன்- நன்கு.

535. முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை பின்னூ றிரங்கி விடும்.

(இ-ரை.) முன் உறக் காவாது இழுக்கியான் - தன்னால் தடுக்கப்பட வேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக் காவாது மறந்திருந்தவன்; பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன் தவற்றையெண்ணி வருந்தியழிவான்.

காக்கவேண்டிய துன்பங்கள்: பகைவர் சோர்வு பார்த்துச் செய்வனவும் பஞ்சம் வெள்ளம் முதலியனவுமாம். ஊற்றின்கண் என்பது உருபுஞ் சாரியையும் உடன்தொக்கு நின்றது. விடுதல் நீங்குதல்; இங்கு அழிதல்.