பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

87



வேந்தனெனப் பெற்றான். முந்தின குறளில், தீமை செய்யப் பிரிந்துபோய் அது நீங்கியவழித் திரும்பிவந்த உறவினனையும்; இக் குறளில், கரணியமின்றிப் பிரிந்துபோய் ஒரு பயன் நோக்கித் திரும்பிவந்த உறவினனையும், தழுவிக்கொள்ளும் முறைகள் கூறப்பட்டன என வேறுபாடறிக.

அதி. 54 - பொச்சாவாமை அதாவது, அறிவாற்றல் படை யரண் பொருள் புகழ் முதலியவற்றால் மகிழ்ந்து, நாடுகாத்தல், பகையழித்தல் முதலிய கடமைகளை மறந்து சோர்ந்திராமை. பொச்சாப்பினாற் சுற்றந்தழுவுதல் கூடாமையின். இது சுற்றந்தழாலின் பின் வைக்கப்பட்டது.

531. இறந்த வெகுளியிற் றீதே சிறந்த வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

(இ-ரை.) சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு - மிகுந்த இன்பக் களிப்பால் வரும் மறதி; இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த எரிசினத்திலும் தீயதாம்.

சிறந்த வுவகை பெருஞ்செல்வம், இடைவிடா இன்ப நுகர்ச்சி, பெரும் புகழ் முதலியவற்றால் நேர்வது. அளவான வெகுளி பகைவரை யொடுக்குதற்கும் கொடியோரைத் தண்டித்தற்கும் வேண்டுவதாம். அளவிறந்த வெகுளி ஒருகால் கடும்பகைவரைக் கொல்ல உதவலாம். ஆயின், வினைச் சோர்வு தன்னையே கொல்லுதலால். அதனினுந் தீயதாயிற்று.

532. பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

(இ-ரை.) நிச்சநிரப்பு அறிவினைக் கொன்ற ஆங்கு - நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; பொச்சாப்பு புகழைக் கொல்லும் - மறதி ஒருவனது புகழைக் கெடுக்கும்.

நிச்சநிரப்பாவது நாள்தோறும் வருந்தி இரந்துண்ணும் நிலைமை. "அன்ன மொடுங்கினால் அஞ்சு மொடுங்கும்."ஆதலாலும்,

“நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்” (குறள்.410)

ஆதலாலும், நிலையான வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கும். அது போல் மறவியும் தற்காப்பின்மையாலும் கருமக்கேட்டாலும் அரசனது புகழை அழிக்கும். வறுமையை நிரப்பென்பது மங்கல வழக்கான எதிர்மறைக் குறிப்பு.