பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

99



அழுத கண்ணீரன்றோ; செல்வத்தைத் தேய்க்கும் படை - அவ் வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம்.

கொடுங்கோலரசன் கொடுமையைக் குடிகளின் ஆற்றொணாத் துயர நெஞ்சே போக்கிவிடும். அதற்கு வேற்றரசன் வினை வேண்டுவதில்லை யென்பது கருத்து. செல்வத்தை யழிப்பது துயரநெஞ்சே யாயினும், அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது கண்ணீராதலால், அழிப்புவினை கண்ணீரின்மே லேற்றப்பட்டது. செல்வத்தை மரமாக உருவகியாமையின் இது ஒருமருங் குருவகம். ஏகாரம் வினா. “எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும்." ஆதலால், கொடுங்கோலரசனை இறைவனே அழித்துவிடுவான் என்பது கருத்து.

556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன் மன்னாவா மன்னர்க் கொளி.

(இ-ரை.) மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோலாட்சியினாலேயே; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச் செங்கோலாட்சி யில்லாவிடின் அவர்க்கு இம்மையிலும் பெயரும் மதிப்பும் இல்லாமற்போம்.

ஒளி யென்பது ஒருவன் தான் வாழுநாளில் எல்லாராலும் மதிக்கப்படும் மதிப்பு. அது பெரும்பாலும் வாய்ச்சொல்லாக நிகழ்வது. புகழ் என்பது ஒருவன் இறந்த பின்பு எல்லாராலும் உயர்த்துச் சொல்லப்படும் உயர்வு. அது பெரும்பாலும் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இலக்கிய வடிவில் திகழ்வது.

“உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்” (நாலடி.6)

என்னும் நாலடிச் செய்யுளை நோக்குக. மன்னுதல் இரண்டனுள் முன்னது நிலைபெறுதல்; பின்னது பொருந்துதல், கல்வி, கொடை, வெற்றி முதலியனவாக ஏதுக்கள் பலவாதலின், அவற்றினால் வரும் ஒளி புகழ்களும் பல வாயின. 'மன்னாவாம்' என்பதிலுள்ள ஆக்கச்சொல் முன்னுஞ் சென்று இயையும். செங்கோன்மையால் என்னும் மூன்றாம் வேற்றுமையுருபும் 'ஒளியும்’ என்னும் எச்சவும்மையும் தொக்கன. நிலைபெறுதல் (மன்னுதல்) என்றது புகழ் நிலைபெறுதலை.

557. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு.