பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

107



569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.

(இ-ரை.) சிறை செய்யா வேந்தன் - போர் வருவதற்கு முன்பே தனக்குப் புகலாக ஓர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - போர் வந்தபோது தனக்குப் பாதுகாப்பின்மையால் அஞ்சி விரைந்து கெடுவான்.

படைமறவர் அஞ்சித் தன்னைவிட்டு நீங்குதலாற் பகைவராற் பிடிக்கப்பட்டு, நாடோ செல்வமோ உயிரோ அம் மூன்றுமோ இழக்க நேருமாதலின், 'வெருவந்து வெய்து கெடும்' என்றார். 'வெய்து' என்பது கடுந்துன்புற்று என்றுமாம். இதனால் அரசன் தானே அஞ்சும் வினையும் அதன் தீங்கும் கூறப்பட்டன.

570. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல தில்லை நிலக்குப் பொறை.

(இ-ரை.) கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் - கொடுங்கோலரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத் துணைவராகச் சேர்த்துக்கொள்வான்; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை - அக் கூட்ட மல்லாது நிலத்திற்கு வேறு கனமான பொறை (பாரம்) இல்லை.

கொடுங்கோலன் செயல் அவனாட்சியின்மே லேற்றிக் கூறப்பட்டது. கற்றோர் கடுங்கோலனொடு கூடாமையிற் 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையோரைப் பொறுக்கும் பொறை இயல்பாக விருந்து பொறையாகத் தோன்றாமையின் ‘அதுவல்லதில்லை நிலக்குப் பொறை' என்றுங் கூறினார். ‘நிலக்கு' என்பதில் அத்துச்சாரியை தொக்கது. இதனால் நிலமும் அஞ்சும் வினை கூறப்பட்டது.

அதி. 58 - கண்ணோட்டம் அதாவது, தன் உறவினரும் நண்பரும் தன்னொடு பழகியவரும் தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவினவரும் எளியவரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு. இது அவரைக் கண்டவுடன் அவர்மீது மனம் விரைந்தோடுவதுபற்றிக் கண்ணோட்டம் எனப்பட்டது. வெருவந்த செய்தற்கு நேர்மாறான பண்பாதிலின், இது வெருவந்த செய்யாமையின் பின் வைக்கப்பட்டது.