பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

108

திருக்குறள்

தமிழ் மரபுரை



கண்ணோட்டம் நடுநிலை திறம்பியதும் திறம்பாதததும் என இரு வகைத்தாம். “ஓர்ந்துகண் ணோடாது” (குறள். 541) என்பதிற் சொல்லப்பட்டது திறம்பியது; இங்குச் சொல்லப்படுவது திறம்பாதது.

571. கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யுண்மையா னுண்டிவ் வுலகு.

(இ-ரை.) கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு பண்புடையாரிடத்தில் இருப்பதனாலேயே; இவ் உலகு உண்டு - இவ் வுலகம் அழியாது இருந்துவருகின்றது.

கண்ணோட்டம் மக்களெல்லாரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பேனும், அரசருக்கு இன்றியமையாது வேண்டுவதாம். நாடு முழுதும் அரசன் கையிலிருத்தலால், அவனிடத்திற் கண்ணோட்ட முண்மை குடிகள் இன்பமாக வாழ்வதற்கும், இன்மை ஏமமின்றி மாள்வதற்கும் ஏதுவாம். அகத்தழகு புறத்தழகு என அழகு இருவகைத்தாதலின். கண்ணோட்டம் காரிகை யெனப்பட்டது. மேலும் அதன் சிறப்பு நோக்கிக் 'கழிபெரு' என ஈரடையுங் கொடுக்கப்பெற்றது. இது மீமிசைச்சொல். "கண்ணோட்டம்... உண்டிவ் வுலகு" என்பது,

“உண்டா லம்மவிவ் வுலகம்.......... பிறர்க்கென முயலுந ருண்மை யானே" (புறம்.182)

என்பது போன்றது.

572. கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை.

(இ-ரை.) உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தினால் நடைபெற்று வருகின்றது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆதலால், அக் கண்ணோட்டம் இல்லாதார் இவ் வுலகத்தி லிருப்பது மாநிலத்திற்கு வீண் சுமையேயன்றி ஒரு பயனுமில்லாததாம்.

உலகியல் என்பது ஒப்புரவொழுகல். அது செய்யாதவன் மக்கட் பிறப்படைந்தும் அதனாற் பயன்பெறாதவனாதலின், 'நிலக்குப் பொறை' என்றார். நிலக்கு என்பதில் அத்துச்சாரியை தொக்கது. இம்மையிற் பிறர்க்கும்