பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

110

திருக்குறள்

தமிழ் மரபுரை



நாதம் அரவம். கம்பிதம் நடுக்கம்.

இசைக்கருவிகளுள் தலைமையான யாழை இயக்கும் முறைகள் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ். குறும்போக்கு என்னும் எண்வகை இசையெழாலும்; வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்னும் எண் வகைக் கரணமுமாம். கண் கண்டவழி நிகழ்தலாற் கண்ணோட்டத்தைக் கண்ணின் பண்பாகக் கூறினார். இறுதியிலுள்ள 'கண்' காலங் குறித்து வந்த இடப்பெயர். பண் பாடற்கியைபின்மை, ஆளத்தி (ஆலாபனை) செய்ய முடியாவாறும் இன்பந்தராவாறும் ஆரோசை அமரோசைகளில் (ஆரோகண அவரோகணங்களில்) பகைமுரல் கலப்பதால் நேர்வதாம்.

574. உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற் கண்ணோட்ட மில்லாத கண்.

(இ-ரை.) அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் – தகுந்த அளவிற்குக் கண்ணோட்ட மில்லாத கண்கள்; முகத்து உளபோல் எவன் செய்யும் - முகத்தில் உள்ளனபோல் தோன்றுவதல்லது வேறென்ன பயன்தரும்?

குருட்டுக் கண்ணிற்கும் கண்ணோட்ட மில்லாத கண்ணிற்கும் வேறு பாடில்லை. 'எவன் செய்யும்? என்னும் வினா எதிர்மறை விடையை நோக்கிற்று. போதா அளவினின்று நீக்குதற்கு ‘அளவினான்' என்றார்.

575. கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும்.

(இ-ரை.) கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவர் கண்ணிற்கு அணிகலம்போல் அழகு செய்வது கண்ணோட்டமே; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அவ் வணிகலமின்றேல் அது அறிவுடையோராற் புண்ணென்றே கருதப்படும்.

மையூட்டும் பெண்டிர் கண்ணிற்கும் மையூட்டா ஆடவர் கண்ணிற்கும், செல்வர் போன்றே வறியாரும் அணியக்கூடிய சிறந்த அணிகலம் கண்ணோட்டம். அஃதன்றி இவ் வுறுப்பிற்கு வேறு அணிகலமு மில்லை. ஆதலால், அவ் வணிகல மில்லாதார் கண் அழகிழப்பதுடன் பல்வேறு வகையில் நோவுதரும் உறுப்பாயிருப்பதுபற்றி, 'புண்ணென் றுணரப்படும்' என்றார். பல்வேறு வகை நோவாவன: கண்ணோயும் தூசியுறுத்துதலும் தீய ஆசை யுண்டாக்குதலுமாம்.