பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

112

திருக்குறள்

தமிழ் மரபுரை



இவ் வுலகு உரிமை உடைத்து - இவ் வுலகம் நிலையான உரிமை யாகுந் தன்மை யுடையதாம்.

'கருமஞ் சிதையாமல்' என்பதால் இவ் வதிகாரத்திற் கூறப்பட்டது நெறி தவறாத நற்கண்ணோட்டமே என்பது அறியப்படும். முறை தவறுமிடத்துக் கண்ணோடாமையும் தவறாவிடத்துக் கண்ணோடுதலும் அமைவது அருமையாதலின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றார். தவறுமிடமாவது கண்ணன்ன கேளிர் குற்றஞ் செய்யின் தண்டிக்க விரும்பாமை. தவறாவிடமாவது தன்னால் வெறுக்கப்படுபவன் குற்றஞ் செய்யாவிடினுந் தண்டிக்கவும் சிறுகுற்றஞ் செய்யினும் பெருந் தண்டனையிடவும் விரும்புதல். இவ் விரண்டு மின்றி நடுநிலை முறையும் நற்கண்ணோட்டமும் செய்வார்க்குக் குடிகளெல்லாரும் என்றும் அன்புடன் அடங்கி நடப்பாராகலின், 'உரிமை யுடைத்திவ் வுலகு' என்றார். 'உலகு' அதன் பகுதியாகிய நாட்டைக் குறித்தலின் முதலாகு பெயர்.

579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.

(இ-ரை.) ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை வருத்தி யொழுகும் இயல்புடையாரிடத்தும்; கண்ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பே தலை - பழைய நட்புக் கருதிக் கண்ணோட்ட முடையராய் அவர் குற்றத்தைப் பொறுத்தொழுகும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.

இப் பொருட்கு, இந்தியா சீனாவின் வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக்கொண்டு போவதை எடுத்துக்காட்டாகக் கொள்க. 'பண்பினார் என்பது அவர் வழக்கத்தை யுணர்த்திற்று. உம்மை எச்சமும் இழிவுங் கலந்தது.

(2) ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் - தம்மால் தண்டித்து அடக்கப்பட வேண்டிய குற்றமுடையாரிடத்தும்; கண்ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பே தலை - கண்ணோட்டஞ் செய்து அவர் குற்றத்தைப் பொறுத்து அமையும் இயல்பே தலைசிறந்ததாம்.

இப் பொருட்கு, இந்தியா பாக்கித்தான் தாக்குதலைப் பொறுத்துக் கொண்டமைவதை எடுத்துக்காட்டாகக் கொள்க. 'பண்பினார்' என்பதும் உம்மையுங் மேலனவே.