பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

115



வேண்டுமாதலின் 'வல்லறிதல்' என்றும், கூறினார். ஒற்றால் என்பது அதிகாரத்தால் வந்தது.

583. ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில்.

(இ-ரை.) ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றரால் எல்லார் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச்செய்து அவற்றால் விளையும் பயனை ஆராய்ந்தறியா அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வெற்றியடையக் கூடிய வேறு வழியில்லை.

நிகழ்ந்த செய்திகளையும் அவற்றின் விளைவையும் அறியாத அரசன், திடுமென்று பகைவரால் தாக்கப்படின் வெற்றியடைதற்கு வழியில்லை யாதலின், 'கொற்றங்கொளக் கிடந்ததில்' என்றார். இதைக் கொளக்கிடந்தது கொற்றமில்லை எனச் சொன்முறைமாற்றி தோல்வியன்றிக் கொள்ளக் கிடந்ததொரு வெற்றியில்லை என்றுரைப்பினு மமையும்.

584. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையு மாராய்வ தொற்று.

(இ-ரை.) வினைசெய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - அரசியல் வினைஞர், அரசரின் உறவின் முறையார். பகைவர் என்று சொல்லப்படும் எல்லாரையும் சொற்செயல் பொருள்களால் மறைவாக ஆராய்வானே; ஒற்று - சரியான ஒற்றனாவான்.

வினைசெய்வார் முதலிய மூவகுப்பாரும் அரசனுக்குத் தெரியாமலே தன்னாட்டொடும் பகை நாட்டொடும் தொடர்புகொள்ளக் கூடுமாதலின், அவரனைவரையும் மறைவாக ஆராயவேண்டு மென்றார். ‘ஆங்கு’ அசைநிலை.

585. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு முகாஅமை வல்லதே யொற்று.

(இ-ரை.) கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் அயிர்க்கப்படாத வடிவொடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஒருகால் அயிர்த்து நோக்கி ஆராயத் தொடங்கின், அவர் சினந்து நோக்கும் நோக்கிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாமை வல்லதே - எவ்விடத்திலும் எவ்வழியைக் கையாளினும் உள்ளத்திலுள்ளதை வெளிவிடாமை வல்லவனே; ஒற்று - சிறந்த ஒற்றனாவன்.