பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44

திருக்குறள்

தமிழ் மரபுரை



படை, அரண், பொருள், நட்பு முதலிய வலிமைகளால் நீக்கப்படாத தெய்வத் துன்பங்களை நீக்குதற்கும். அடையப்பெறாத வெற்றியை அடைதற்கும் உதவும் பெரியார் துணை அவ் வலிமைகளினுஞ் சிறந்தது என்பதாம்.

445. சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

(இ-ரை.) சூழ்வார் கண்ணாக ஒழுகலால் - மந்திரிமாரைக் கண்ணாகக் கொண்டு அரசியல் நடத்தலால்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் மந்திர வினைஞரை ஆராய்ந்து அவருட் சிறந்தவரைத் தனக்குத் துணையாகக் கொள்க.

அரசரெல்லார்க்கும் சூழ்வினைத்திறம் இன்மையானும், அத் திறமுள்ளவர்க்குப் பல்வேறு தொழிற்சுமை வந்தழுத்துதலானும், அரசர்க்கு இயல்பாகவுள்ள போர்த்திறம் சூழ்வினைத் திறத்தை மறைத்தலானும், மந்திரித் தொழிற்கென்றே பிறந்தவரும் அஃதொன்றையே தொழிலாகக் கொண்ட வருமான மந்திரிமாரின்றிப் பொதுவாக எவ்வரசும் இனிது நடைபெறாமையின், அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தலென்றது, திருக்குறள் போலும் முப்பால் அறநூல்களுள், அமைச்சியலிற் சொல்லப்படும் அமைச்சிலக்கணங்களை. மன்னவன் என்னும் குறுநில அரசன் பெயர் இங்குப் பெருநில வரசனையுங் குறித்து நின்றது.

446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்.

(இ-ரை.) தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்க அமைச்சரைச் சுற்றமாகவுடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; செற்றார் செயக்கிடந்தது இல் - பகைத்தவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றுமில்லை.

தக்கார் அமைச்சுத் தொழிலுக்குத் தகுதியுடையார். நட்புப்பிரித்தல், பகைபெருக்குதல், உட்பகை விளைத்தல், பொருதல், வஞ்சித்தல் முதலிய பல்வேறு வலக்காரங்களை (தந்திரங்களை)ப் பகைவர் கையாளினும், தகுந்த அமைச்சர் துணைகொண்டு தானும் அறிந்தொழுக வல்லானுக்கு ஒரு தீங்குஞ் செய்ய முடியா தென்பார், 'செற்றார் செயக்கிடந்த தில்' என்றார்.