பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50

திருக்குறள்

தமிழ் மரபுரை



457.மனநல மன்னுயிர்க் காக்க மினநல மெல்லாப் புகழுந் தரும்.

(இ-ரை.) மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் - மாந்தருக்கு மன நன்மை ஒரு செல்வமாம்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இன நன்மை எல்லா வகையிலும் புகழை உண்டாக்கும்.

மன் என்னும் சொல் மன்பதை என்பதிற்போல் மாந்தனைக் குறித்தது. இச் சொல்லின் வரலாறு முன்னரே கூறப்பட்டது. "மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்” (குறள். 34) என்றும், “அறத்தினூஉங் காக்கமு மில்லை” (குறள்.22) என்றும் முன்னரே கூறியிருத்தலால், "மனநல மன்னுயிர்க் காக்கம்” என்றும், இனநல முடையார்க்குப் புகழ்க்கேதுவான செயலெல்லாம் வெற்றியாய் முடிதலின் 'எல்லாப் புகழுந் தரும்' என்றும் கூறினார். இதனாலும் இரு வகைத் தூய்மையின் பயன்களும் கூறப்பட்டன.

458. மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநல மேமாப் புடைத்து.

(இ-ரை.) மனநலம் நன்கு உடையராயினும் - மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அறிவு நிறைந்தோர்க்கு இனநன்மை அரணாகுந் தன்மையுடையது.

மனநலம் பிறப்பிலேயே அமையினும் அது முன்னோரிடமிருந்து பெற்ற மரபுரிமையா யிருக்கலா மாதலால், அதுவும் ஒருவகையில் இனநலத்தால் அமைவதே. இயற்கையான மனநலத்தையும் இனநலம் வளர்த்து உறுதிப்படுத்துவதால், அதற்கு 'ஏமாப்புடைத்து' என்றார். உம்மை இயற்கை மனநலத்தின் அருமையை உணர்த்திற்று. இது மறுதலைக் கொள்கையை ஒருமருங்கு தழுவியதாகும்.

'நன்கு' என்பதற்கு 'நல்வினையால்' என்று பொருள்கொண்டார் பரிமேலழகர். அது பொருந்துமேனும் அதுவே திட்டமான ஆசிரியர் கருத்தென்பதற்குக் குறளில் ஒரு குறிப்புமில்லை. அதுவே அவர் கருத்தாயின், மனநல நல்வினைப் பேறாயினும் என்றோ, மனநல மூழான் மருவினும் என்றோ யாத்திருப்பர். எனினும் மரபுரிமைப் பேறாகவோ நல்வினைப் பேறாகவோ திருவருட் பேறாகவோ அவர் கொண்டிருக்கலாமென்று கருத இடமுண்டு.