பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

51



459. மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து.

(இ-ரை.) மனநலத்தின் மறுமை ஆகும் - ஒருவனுக்கு மனநன்மையால் மறுமையின்பம் உண்டாகும்; அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து - அதுவும் இனநன்மையால் வலியுறுதலை யுடையதாம்.

மேல் அரிதாய் நிகழ்வதாக ஒப்புக்கொண்ட மனநலத்தின் பயனைக் கூறியவர், அதற்கும் இனநலம் துணை செய்யும் எனத் தம் கொள்கையையும் விட்டுக்கொடாது நின்றார். ஏதேனுமொரு சமையத்துக் காமவெகுளி மயக்கங்களால் மனநலங் குன்றினும் அதை உடுக்கை யிழந்தவன் கைபோல இனநலம் உடனே திருத்துமென்பது கருத்து. 'மற்று' அசைநிலை. மனநலம் மட்டுமன்றி அதன் மறுமைப்பயனும் என்று பொருள்படுதலால், உம்மை இறந்தது தழுவிய எச்சம். இவ் வைந்து குறளாலும், சிற்றினஞ் சேர்தலின் தீமை நல்லினஞ் சேர்தலின் நன்மையாகிய எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது.

460. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி னல்லற் படுப்பதூஉ மில்.

(இ-ரை.) நல் இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை - ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் சிறந்த துணையுமில்லை; தீ இனத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதும் இல் - தீயினத்தினும் மிகுதியாகத் துன்புறுத்துவதும் இல்லை.

நல்வழியிற் செலுத்தி இன்புறச் செய்வதால் நல்லினத்தைத் துணை யென்றும், தீய வழியிற் போக்கித் துன்புறச் செய்வதால் தீயினத்தைப் பகை யென்றும் கூறினார். அல்லற்படுத்துவது பகையே. ஐந்தனுருபுகள் தமக்குரிய உறழ்பொருளின்கண் வந்தன. உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. 'படுப் பதூஉம்' இன்னிசை யளபெடை.

அதி.47 - தெரிந்து செயல்வகை அதாவது, அரசன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந்திறம். அது பெரியாரைத் துணைக்கொண்டு சிற்றினஞ் சேராதும் செய்யப் படுவதாகலின், அவற்றின் பின் வைக்கப்பட்டது.

461. அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல்.