பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52

திருகுறள்

தமிழ் மரபுரை


(இ-ரை.) அழிவதும் - வினை மேற்கொள்ளும்போது அதனால் அழிவதையும்; ஆவதும் - அழிந்தாற்பின் ஆவதையும்; ஆகி வழிபயக்கும் ஊதியமும் - வினை முடிந்தபின் தொடர்ந்து வரும் ஊதியத்தையும்; சூழ்ந்து செயல் - ஒப்புநோக்கி ஆராய்ந்து தக்கதாயின் செய்க, தகாததாயின் விட்டு விடுக.

தக்கதாவது, அற்றைச் செலவினும் வரவுமிக்குப் பிற்றை வரவுமுள்ளது; அல்லது அற்றை வரவு செலவொத்துப் பிற்றை வரவுள்ளது; அல்லது அற்றை வரவினுஞ் செலவு மிக்குப் பிற்றைப் பெருவரவுள்ளது; அல்லது பிற்றை வரவின்றி அற்றைச் செலவினும் வரவுமிக்கிருப்பது. தகாததாவது பிற்றை வரவின்றி அற்றை வரவு செலவொத்தோ வரவினுஞ் செலவு மிக்கோ இருப்பது; அல்லது அற்றை வரவினுஞ் செலவுமிக்குப் பிற்றைச் சிறுவரவுள்ளது. 'அழிவதூஉம்’, ‘ஆவதூஉம்' இன்னிசை யளபெடைகள்.

462. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில்.

(இ-ரை.) தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்தெடுத்த சூழ்ச்சித் துணையினத்தோடு கூடிச் செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமும் தனிப்பட எண்ணிச் செய்யவல்ல அரசர்க்கு; அரும்பொருள் யாது ஒன்றும் இல் - முடித்தற்கரிய வினை எதுவும் இல்லை.

'தெரிந்த இனம்' என்பது வினைகளையெல்லாஞ் செய்யுந் திறமறிந்த இனம் என்றுமாம். வினையாவன போரும் நால்வகை ஆம்புடைகளைப் பயன்படுத்துமாறும் சந்து செய்தலும் பிறவுமாம். வெற்றிக்கேற்ற கருவிகளும் வழிகளும் குறைவின்றிக் கையாளப் பெறுதலால், அரிய வினைகளும் எளிதாகக் கைகூடப் பெறுவர் என்பதாம்.

463. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரறிவுடை யார்.

(இ-ரை.) ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - உறுதியற்ற எதிர்கால வூதியத்தை நோக்கி இருப்பிலுள்ள முதலையும் இழத்தற் கேதுவான முயற்சியை; அறிவு உடையார் ஊக்கார் - அறிவுடையோர் மேற்கொள்ளார்.

ஊதியத்தையன்றி முதலையும் இழக்கும் செய்வினை, வலியும் காலமும் இடமுமறியாது பிறன் நாட்டைக் கைப்பற்றச் சென்று தன் நாட்டையும் இழத்தல்