பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

63



காலம் ஏற்காவிடின் வலியாற் பயனில்லை யென்பது கருத்து. ஏற்ற காலமாவது, வெம்மையுங் குளிரும் மிகாது நச்சுக்காற்று வீசாது தண்ணீரும் உணவும் தாராளமாய்க் கிடைத்து நால்வகைப் படையும் நலமாகச் செல்வதாயிருப்பது. இதில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை அணி.

482. பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத் தீராமை யார்க்குங் கயிறு.

(இ-ரை.) பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய் தொழுகுதல்; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டி வைக்கும் கயிறாம்.

காலத்தொடு பொருந்துதல் காலந்தவறாமற் செய்தல். 'தீராமை' என்றதனால் தீருந்தன்மைய தென்பது பெறப்படும். வினைகள் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் ஒருபோதும் நீங்காதென்பது கருத்து.

483. அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின்.

(இ-ரை.) கருவியான் காலம் அறிந்து செயின் - சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின்; அருவினை என்ப உளவோ - அரசர்க்கு. முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ? இல்லை.

கருவிகள் ஐவகை யாற்றலும் நால்வகை ஆம்புடைகளுமாம். அவற்றொடு காலமும் வேண்டுமென்பதற்குக் 'கருவியான்' என்றார். 'உளவோ' என்னும் வினா எதிர்மறை விடையை அவாவுவது.

484. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங் கருதி யிடத்தாற் செயின்.

(இ-ரை.) ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும்; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குரிய வினையை அவன் தகுந்த காலமறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின்.

வினை பெரிதாதலின் இடமும் வேண்டியதாயிற்று. உம்மை உயர்வு சிறப்பு.