பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

62

திருக்குறள்

தமிழ் மரபுரை



"ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து”, (220)

“சாதலின் இன்னாத தில்லை யினிததூஉம் ஈத லியையாக் கடை" என்று ஆசிரியரும், (230)

"பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் னாடிழந் ததனினு நனியின் னாதென வாள்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்" (புறம்.165)

என்று பெருந்தலைச் சாத்தனாரும்,

"சாயின் றென்ப ஆஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி யுரைசா லோங்குபுக ழொரீஇய முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே" (புறம்.127)

என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் பாடியிருத்தலால், தனிப்பட்ட பெருஞ்செல்வர்க்கு ஒப்புரவு தகுமென்றும், பொறுப்பு வாய்ந்த பெருநிலவரசர்க்கு அளவறிந்து வாழ்வதே கடமை யென்றும், முடிபு செய்யலாம். இந் நான்கு குறளாலும் பொருள்வலி யறியுந்திறங் கூறப்பட்டது.

அதி. 49 - கால மறிதல் அதாவது, வலிமிக்கவனாய்ப் பகைமேற் செல்லும் அரசன், அச்செலவிற்கும் போருக்கும் ஏற்ற காலத்தை அறிதல். அதிகார வொழுங்கும் இதனால் விளங்கும்.

481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

(இ-ரை.) காக்கை கூகையைப் பகல் வெல்லும் - காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும்; இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அதுபோலப் பகைவரைப் போரில் வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும்.