பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

61



ஒரு குளத்திற்குள் நீர்வந்து விழும் வாய்க்காலினும் அதினின்று நீர் வெளியேறும் வாய்க்கால் அகன்றிராவிடின் அக் குளநீர் குன்றாது என்பதே. பிறிதுமொழிதற் குறிப்புக்கொண்டது இக் குறட்பொருள்.

479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல வில்லாகித் தோன்றாக் கெடும்.

(இ-ரை.) அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையில்; உளபோல இல் ஆகித் தோன்றாக் கெடும் - அவன் பல்வகைப்பட்ட பொருள்களும் உள்ளன போலத் தோன்றி உண்மையில் இல்லாதனவாய்ப் பின்பு அப் பொய்த் தோற்றமும் இல்லாது அழியும்.

அளவறிந்து வாழ்தலாவது, செலவை வரவிற்குச் சுருக்காவிடினும் அதற்கு ஒப்பவாவது செய்து ஈந்தும் நுகர்ந்தும் வாழ்தல். தொடக்கத்திற் கேடு வெளிப்பட்டுத் தோன்றாமையின் 'உளபோல இல்லாகி' என்றார்.

"முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியு முளமே குன்று முண்டுநீர் பாடினிர் செலினே" (புறம்.110)

என்பது ஒருவாறு இக் குறட்கு எடுத்துக்காட்டாம்.

480. உளவரை தூக்காத வொப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.

(இ-ரை.) உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள ஈகை வலியளவை நோக்காது செய்யும் ஒப்புரவொழுகலால்; வளவரை வல்லைக் கெடும் - ஒருவனது செல்வத்தின் அளவு விரைந்து கெடும்.

ஈகை வலியளவெனினும் ஈயப்படும் பொருளளவெனினும் ஒன்றே. “களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில்" (புறம்.127) என்பது இக் குறட்கு எடுத்துக்காட்டாம். ஆயினும்,