பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60

திருக்குறள்

தமிழ் மரபுரை



சென்று முற்றுகையிட்டவன் பல அரண்களைக் கடந்து தான் செல்லுமளவு சென்றதோடமையாது, மேலும் புகுந்து கைப்பற்றற்கரிய உள்ளரணை யடைவானாயின், அவன் கொலையுண்டிறப்பது திண்ணம் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இதுவும் பிறிதுமொழித லணியாம். 'அர்’ ஓர் இலக்கியச் சொல் வளர்ச்சியீறு. வினைவலி யறியாமையின் தீங்கு இங்குக் கூறப்பட்டது.

477. ஆற்றி னளவறிந் தீக வதுபொருள் போற்றி வழங்கும் நெறி.

(இ-ரை.) ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் அளவறிந்து அதற்குத் தக்கவாறு அளவாக ஈக; அது பொருள் போற்றி வழங்கும் நெறி - அதுவே செல்வத்தைப் பேணிக்காத்து ஈந்தொழுகும் வழியாம்.

மேல் ‘ஈகை' என்றும் (382), 'வகுத்தலும்' (384) என்றும் 'கொடை' (390) என்றும், சொல்லப்பட்ட ஈகை வகைகட்குச் செலவிடவேண்டிய பொருளளவு இங்குக் கூறப்பட்டது. "வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்” (திரிகடுகம், 21) என்பதால், அரசன் தன் மொத்த வருமானத்தில் அரைப்பகுதியை ஆட்சிச் செலவிற்கும், காற்பகுதியை எதிர்பாராவாறு இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழக்கூடிய இடர் வந்தவிடத்து அதை நீக்கும் ஏமவைப்பிற்கும் ஒதுக்கி, எஞ்சிய காற்பகுதியை ஈகைக்குப் பயன்படுத்த வேண்டுமென்பது பெறப்படும். இங்ஙனஞ் செய்யின், செலவிடும் பொருளின் அளவீட்டினாலும் செய்யும் அறத்தின் பயனாலும் செல்வம் பேணிக்காக்கப்படு மாதலின், அதைப் பொருள் போற்றி வழங்கு நெறி' என்றார். இங்ஙனமன்றி, வந்ததையெல்லாம் வழங்கிக் கொண்டிருப்பின், வித்துக்குற்றுண்பவன் போலும் வலியறியாது போர்க்குச் செல்வான்போலும் விரைந்து கெடுவான் என்பது கருத்து, “வளவனாயினும் அளவறிந் தழித்துண்" (கொன்றை. 81) என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

478. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை.

(இ-ரை.) ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் - அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும்; போகு ஆறு அகலாக்கடை - செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து; கேடு இல்லை - கெடுதல் இல்லை.

இது சிக்கனத்தின் நன்மையை எளிய கணக்கு முறையால் விளக்குவது. அளவு என்பது பின்னுங் கூட்டி யுரைக்கப்பட்டது. 'அகலாக்கடை’ என்றதனால், வரவுஞ்செலவும் ஒத்திருப்பினுங் கேடில்லை யென்பதாம்.