பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

81



டெய்த வுணர்தலாவது, இத் தன்மையன் இவ் வினையை இக்காலத்து இவ் வகையிற் செய்யின் இவ்வாறு முடியும் என்று கூட்டி நோக்கி உய்த்துணரல்.

517. இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல்.

(இ-ரை.) இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ் வினையை இக் கருவிகொண்டு இவ்வாற்றலுள்ள இவன் செய்துமுடிப்பான் என்று கூறுபடுத்தி யாராய்ந்து; அதனை அவன்கண் விடல் - மூன்றும் பொருந்திய விடத்து அவ் வினையை அக் கருவியும் அவ் வாற்றலுமுள்ள அவனிடம் ஒப்படைக்க.

கருவியாவன: முதற்கருவி, துணைக்கருவி, பொருள், துணைவர் முதலியன. மூன்றும் பொருந்துதலாவது, வினைசெய்வானொடு வினைக்குரிய ஆற்றலும் கருவியும் சேர்தல். 'அவன்கண் விடல்' அவனை வினைக் குரியவனாக்குதல்.

518. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை யதற்குரிய னாகச் செயல்.

(இ-ரை.) வினைக்கு உரிமை நாடிய பின்றை - அரசன் ஒருவனை ஒரு வினை செய்தற்குரியவனாக ஆராய்ந்து துணிந்தபின்; அவனை அதற்கு உரியன் ஆகச் செயல் - அவனை அவ் வினைக்கு முழு வுரிமையும் உடையவனாகச் செய்க.

‘வினைக்குரிமை நாடிய பின்றை' என்றது வினைவகையான் வேறாகு மாந்தனன்மை யறிந்தபின் என்பதாம். 'அதற்குரியனாகச் செயல்' என்றது அரசன் அதில் தலையிடாதிருத்தலை. தலைசிறந்த ஆற்றலும் தன்மானமுமுள்ள வினைத்தலைவரின் வினையில் தலையிடுவது, 'தெளிந்தான்கண் ஐயுறவு' போல் தீங்கு விளைக்குமாதலின், அது தகாதென்றார். அரசன் ஒருவனது வினையை மறைவாகக் கவனித்து வருவது வேறு; அதில் வெளிப்படையாகத் தலையிடுவது வேறு. ஒரு தகுந்த வினைத்தலைவனது வினையில் அரசன் தலையிடாது முழுப் பொறுப்பையும் அவனிடம் விட்டுவிட்டால், அவன் மகிழ்ச்சியும் பெருமையும் ஊக்கமுங் கொண்டு அதை முழு வெற்றியாகச் செய்து முடிப்பான் என்பது கருத்து.

519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு.