பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80

திருக்குறள்

தமிழ் மரபுரை



நேர்மையானவரென்று கருதப் பெற்றவர் வணிகத்துறை யதிகாரியானபின் கையூட்டு வாங்குவதும், தலைமையமைச்சராகவும் படைத் தலைவராகவும் அரசனால் அமர்த்தப் பெற்றவர் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அரசனைக் கவிழ்த்துவிட்டுத் தாம் அரசராவதும், இன்று நிகழ்வது போன்றே அன்றும் நிகழ்ந்தமையின், 'வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்' என்றார். தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல, பொருளின் அதிகாரச்சுவை கண் டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்தரியல்பாதலால், எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத்தலைவர் வினையையும் இறுதிவரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும், சிறிது வேறுபட்ட விடத்தும் அவரை வினையினின்று விலக்கிவிடுவதும், இன்றியமையாதன வென்பதாம்.

515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று.

(இ-ரை.) வினைதான் - எவ்வினையுந்தான்; அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந் துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானை யல்லது; சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் நம்மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று,

'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. பாலது - பாற்று (பால் + து). அறிவாற்றல் பொறையூக்கங்களாலன்றி அன்பினால் மட்டும் எவ்வினையும் முடியாதென்பது கருத்து.

516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல்.

(இ-ரை.) செய்வானை நாடி - செய்வானது தன்மையை முதற்கண் ஆராய்ந்து; வினை நாடி பின்பு அவனாற் செய்யப்படும் செயலின் தன்மையை ஆராய்ந்து; காலத்தோடு எய்த உணர்ந்து - அதன்பின் அவன் தன்மையும் அவன் செயலின் தன்மையும் காலத்தொடு பொருந்துமாறறிந்து; செயல் - அவை பொருந்துமாயின் அவனை அவ் வினையின்கண் அரசன் ஆளுதலைச் செய்க.

செய்வானது இலக்கணம் இவ் வதிகாரத்தின் முதல் முக்குறள்களிலும், வினையின் இயல்பு இதற்கு முந்திய குறளிலும், கூறப்பட்டன. காலத்தோ