பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

83



521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள.

(இ-ரை.) பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் அல்லது அதிகாரம் தொலைந்து வறியனானதின் விளைவாகத் தொடர்பு நீங்கிய விடத்தும், அவனொடு தமக்கிருந்த பழைய வுறவைச் சொல்லிப் பாராட்டும் இயல்புகள்; சுற்றத்தார் கண்ணே உள - உறவினரிடத்திலேயே உள்ளன.

‘பழைமை‘ பழைய இன உறவாட்டு; ஆகுபெயர். நண்பரும் வறியாரும் நன்மை பெற்றிருப்பராதலின், இங்குப் பழைமை யென்றது பழைய இனவுறவு நிகழ்ச்சிகளையே. உம்மை இறந்தது தழுவிய எச்சம்; சிறப்பன்று. ஏகாரம் பிரிநிலை; தேற்றமன்று. பற்றாத போதுமட்டுமன்றிப் பற்றற்ற போதும் என்றும், சுற்றத்தாரிடத்திலேயே என்றும், பொருள்படுவதை நோக்கி யுணர்க.

‘பற்றற்ற கண்ணும்' என்னும் தொடருக்கு “ஒருவன் செல்வந் தொலைந்து வறியனாய வழியும்" என்று பொருள் கூறி, "சிறப்பும்மை, வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது" என்றும், “பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவராகலின், ஏகாரந் தேற்றத்தின்கண் வந்தது" என்றும் சிறப்புரைத்தார் பரிமேலழகர். சிறப்பும்மையில் எச்சக் கருத்துங் கலந்திருப்பதால், வறியனாயவழியும் என்பது இழிவுசிறப்பும்மை யாகுமேனும், "சுற்றத்தார் மாட்டே” என்பதிலுள்ள ஏகாரம் சுற்றத்தாரை வேறுபடப் பிரித்து வரையறுத்தலால் பிரிநிலையேயாம்.

522. விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா வாக்கம் பலவுந் தரும்.

(இ-ரை.) விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்காத உற வினம் ஒருவனுக்கு வாய்க்குமாயின்; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அது அவனுக்கு மேன்மேலுங் கிளரும் பல்வகைச் செல்வத்தை உண்டாக்கும்.

அன்பார்ந்த உறவினர் பல்வகைச் செல்வத்தையுங் காத்து வளர்ப்பராதலின், 'ஆக்கம் பலவுந் தரும்' என்றார். "உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்” ஆதலின், ‘விருப்பறாச் சுற்றம்' என்றும், மேன்மேற் கிளைத்து வளருஞ் செல்வத்தை 'அருப்பறா வாக்கம்' என்றும் கூறினார். 'இயையின்' என்பது இயைதலின் அருமை குறித்து நின்றது. அரும்புதல் - தோன்றுதல், விரும்பு - விருப்பு. அரும்பு - அருப்பு. 'ஆக்கம்’ தொழிலாகுபெயர்.