பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84

திருக்குறள்

தமிழ் மரபுரை



523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.

(இ-ரை.) அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - உறவினத்தொடு உள்ளக் கலப்பில்லாதவன் செல்வ வாழ்க்கை; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்த அற்று - குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும்.

கரையில்லாத குளத்து நீர் காப்பின்றி வெளிச் சென்றுவிடுவது போல, உறவின மில்லாதவன் செல்வமுங் காப்பாரின்றிப் பிறர் கைப்பட்டுவிடும் என்பதாம். உறவினத்தொடு என்பது அதிகாரத்தால் வந்தது. அளவுதல் - கலத்தல் அல்லது கலந்துபேசுதல். 'அளாவு' அளவு என்பதன் நீட்டம். அளவளாவு(தல்) என்பது அளப்பள(த்தல்) என்பதுபோல் பெயரும் வினையுஞ் சேர்ந்த கூட்டுச்சொல். அது இங்கு முதனிலைத் தொழிற்பெயராக நின்றது. வாழ்க்கை யென்றது செல்வத்தோடு கூடிய நல்வாழ்வை, நிறைதல் என்பது குளத்திற்கும் நீர்க்கும் பொதுவினையாதலின், 'நீர்நிறைந் தற்று' என்பது நீரால் நிறைந்தற்று என்னும் பொருள்பட நின்றது. 'ஆன்றோர் அறிவு நிறைந்தோர்' என்னுந் தொடரமைதியை இதனொடு ஒப்புநோக்குக.

524. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்.

(இ-ரை.) செல்வம் பெற்றத்தான் பெற்ற பயன் ஒருவன் செல்வம் பெற்றதனாற் பெற்ற பயனாவது; சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் உறவினத்தால் தான் சூழப்படும் வகை அதைத் தழுவி யொழுகுதலாம்.

சுற்றத்தாற் பெறும் பயன் செல்வமென்று மேற்கூறியவர், இங்குச் செல்வத்தாற் பெறும்பயன் சுற்றமென்று மறுதலை நயம்படக் கூறினார். அரசனுக்குச் சுற்றத்தாற் செல்வம் மட்டுமன்றிப் பாதுகாப்பும் ஆட்சித் துணையும் ஏற்படுவதால், அரசன் சுற்றந் தழுவுவதாற் சுற்றத்திற் குண்டாகும் நன்மையினும் அரசனுக்குண்டாகும் நன்மை பெரிதென்பதாம். பெற்றது - பெற்றதால் - பெற்றத்தால். பெற்றதால் என்பது எதுகை நோக்கி விரிந்தது. அது - அத்து.

'பெற்ற' வென்பதனுள் அகரமும், அதனா னென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன என்பர் பரிமேலழகர்.

525. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்.

(இ-ரை.) கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் சொல்லுதலையும்