பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

85



ஆற்ற வல்லவனாயின்; அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும் - அவன் ஒன்றோ டொன்றாகத் தொடர்ந்து பல்வகை யுறவினத்தாற் சூழப்படுவான்.

இரண்டும் ஒருங்கே யாற்றுதல் அரிதென்பது தோன்ற 'ஆற்றின்' என்றார். அடுக்கிய சுற்றமாவது சுற்றத்தின் சுற்றமும் அதனது சுற்றமுமாகத் தொடர்ந்து செல்வது. கொடையும் இன்சொலும் தமிழவேந்தர் ஆரியரிடத்தினின்று கற்றதுபோல், "இவ் வுபாயங்களை வடநூலார் தானமுஞ் சாமமு மென்ப" என்பர் பரிமேலழகர்.

526. பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில்.

(இ-ரை.) பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் பெருங்கொடையாளியும் சினத்தை வெறுப்பவனுமா யிருப்பின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன் போலச் சுற்றத்தையுடையார் இவ் வுலகத்தில் இல்லை.

பெருங்கொடை வறுமை நீங்குமளவு கொடுப்பது, சினத்தொடு கொடுப்பின் கொடைத்தன்மை கெடுமாதலின், 'வெகுளி பேணான்' என்றார்.

527. காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு மன்னநீ ரார்க்கே யுள.

(இ-ரை.) காக்கை கரவா கரைந்து உண்ணும் - காகங்கள் தமக்கு இரையான பொருள் கண்டவிடத்து அதனை மறையாது தம் இனத்தைக் கரைந்தழைத்து அதனொடு கூடவுண்ணும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தோடு கூடி நுகருஞ் செல்வங்களும் அத்தன்மையார்க்கே உண்டாம்.

சுற்றத்தோடு நுகருஞ் செல்வங்கள் பேரளவின; பல்வகையின; பொதுவுடைமை போல்வன. காக்கைத் தன்மைகள் அன்பு, ஒற்றுமை, கூட்டுறவு முதலியன, 'காக்கை’, ‘ஆக்கம்' பால்பகா வஃறிணைப் பெயர்கள். ஏகாரம் பிரிநிலை.

528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி னதுநோக்கி வாழ்வார் பலர்.

(இ-ரை.) வேந்தன் பொது நோக்கான் வரிசையா நோக்கின் - அரசன் எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின்; அது நோக்கி வாழ்வார் பலர் - அச் சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் உறவினர் பலராவர்.