உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்' (வளைதற் ) கருத்து

சாய்தல், கோணுதல், வளைதல், நெளிதல், மடங்குதல், திருகுதல், வட்டமாதல், முடிதல், சுற்றுதல், சுழலுதல், புரளுதல், உருளுதல், உருண்டையாதல், திரிதல், திரும்புதல், சூழ்தல் முதலிய பலவும் வளைதற் கருத்தொடு தொடர்புள்ளவையாம்.

முல்-வில் = வளைந்த வேட்டைக் கருவி.

ஒ.நோ: முடுக்கு-விடுக்கு = (ஒரு சிறு மடக்குநீர்).

வில்-விலா = வளைந்த நெஞ்செலும்பு அல்லது நெஞ்சக் கூடு. ம. வில், தெ. வில்லு, க. பில்.

முல் -முன்-முனி = வில் (திவா.) "முனிநாண் கோத்து" (உபதேசகா. பஞ்சாக். 96).

முல்-மூல்-மூலை

1. கோணம். “மூலை முடுக்குகளும்" (இராமநா. சுந். 3.) 2. மூலைத்திசை (W). 3. அறைமூலை. “இருட்டறை மூலையிலிருந்த குமரி" (திருமந். 1514).

ம. மூல, தெ. மூல, க. மூலெ.

மூலைக்குத்து = 1. முற்றத்து மூலைக்கு எதிராக வீட்டுத் தலைவாயில் நிலை அமைந்திருக்கை. 2. மூலைப் பார்வை.

மூலைத்திசை = பெருந்திசைகட்கு நடுவேயுள்ள கோணத்திசை. மூலைப்பார்வை = 1. கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை. 2. சாகுந்தறுவாயில் விழி ஒருபுறமாகச் செருகி நிலைக்குத்திடுகை. மூலைமட்டம் = 1. நேர்கோணம். 2. மூலை மட்டப்பலகை (கட்டட. நாமா)

மூலை முடங்கி (மூலை முடக்கு) = வளைந்து செல்லும் சிறு வழி (W.) மூலையரம் = முப்பட்டையரம் (W.).

மூலையோடு = முகட்டுச்சியில் வேயும் ஓட்டுவகை.

மூலைவாசல் = தெருவிற்கு நேராகவன்றி ஒதுக்கமாயமைந்த வாயில். மூலைவாட்டு (மூலைவாட்டம்) = மூலை வாக்கு.

மூலைவிட்டம் = நாற்கோணத்தின் எதிர்மூலைகளைச் சேர்க்குங் கோடு.